தாமிரபரணி ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முள்செடி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில், கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்தப் பணி நடைபெற்று வருகிறது.
கொமஸ்டா நிறுவனத்தில் வாடகையில்லாமல் வழங்கப்பட்ட இயந்திரம் மூலம், எக்ஸ்னரோ நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் நிதி உதவியுடன் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், பிரதிநிதிகள், வியாபாரிகள் சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணி தற்போது தூத்துக்குடி மாவட்டம், கேமலாபாத் அருகே நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றில் முள்செடி அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன் பார்வையிட்டார். அவருடன் பயிற்சி ஆட்சியர் படேல் கிருஷ்ணா பூர்வான், ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்கள் சதீஷ், அஷ்மல், ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் பொது மேலாளர் வேல்முருகன், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் பகுதியில் முள்செடிகள் அதிகளவில் வளர்ந்திருந்த காரணத்தினால், 2023ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது வெள்ளம் ஊருக்குள் புகுந்தது குறித்தும், தற்போது முள்செடிகள் அகற்றப்பட்டு வருவதால் வருங்காலத்தில் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாது என்றும் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பெரிய அளவில் புதர்மண்டிக் கிடக்கும் முள்செடிகளை முக்காணி பகுதி வரை அகற்ற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முத்தாலங்குறிச்சி காமராசு கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து, தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டும் என்றும், கருங்குளம் சம்பன் குளத்தை அழகுபடுத்தி நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


