
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் உள்ள செங்கோல் ஆதீனம் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே ஆதீனமும் இதுவே ஆகும். இந்த ஆதீனத்தில் மலேசியாவைச் சேர்ந்த தமிழர்கள் 25 பேர் சமய தீட்சை பெற்றுக்கொண்டனர்.
மலேசியாவில் உள்ள மெய்கண்டார் அகாடெமியைச் சேர்ந்த 25 பேர் ஆன்மிக சுற்றுப்பயணமாக இந்தியா வந்தனர். இந்த அகாடெமியில் சமயம் மற்றும் சைவ சித்தாந்த வகுப்புகள் இரண்டரை வருட பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை முடித்த 25 பேர் தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளதில் உள்ள செங்கோல் ஆதீனதில் சமய தீட்சை பெற்றுக்கொண்டனர். செங்கோல் ஆதீனம் 103வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீசிவப்ரகாச தேசிக சத்யஞான பரமாசார்ய ஸ்வாமிகள் மலேசிய பக்தர்களுக்கு சமயம் மற்றும் விசய தீட்சை அளித்தார். இந்த 25 பேரின் வலது காதில் பஞ்சாட்சர மந்திரம் சொல்லி திருநீர் அணிந்து தீட்சை அளித்தார்.
பின்னர் தீட்சை பெற்றவர்கள் 108 முறை பெற்ற மந்திரத்தை கூறினார். மலேசியாவில் மெய்கண்டார் அகாடெமியை நடத்தி வரும் சிவபரமசிவம் இது குறித்து கூறியதாவது “தமிழகத்தை சார்ந்த பழமையான மடத்தில் அதுவும் தமிழை வளர்த்த தாமிரபரணி பாயும் மண்ணில் தீட்சை பெறவேண்டும் என்ற காரணத்தால் செங்கோல் மடத்தில் தீட்சை பெற வந்தோம். திருவாவடுதுறை ஆதீனத்தின் பாட திட்டங்களையே மலேசியாவில் பின்பற்றி வருகிறோம். செங்கோல் ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்தவர். அவரிடம் இருந்து தீட்சை பெறவேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தோம்” என்றார். இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் சமய பெரியவர்கள் பலர் கலந்துகொண்டனர்.