தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் நடந்த பாரம்பரிய மாட்டு வண்டி போட்டியை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியில் பொங்கல் பண்டிகையையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நேற்று காலை அங்குள்ள வ.உ.சி. திடலில் நடந்தது. பெரியமாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் மொத்தம் 54 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டி தொடக்க விழாவுக்கு செக்காரக்குடி பஞ்சாயத்து முன்னாள் தலைவரும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவருமான ராமலட்சுமி தலைமை தாங்கினார். செக்காரக்குடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வ.உ.சி. ரத்ததான கழக நிறுவனர் சரவணபெருமாள் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியவுடன் வண்டியில் பூட்டப்பட்ட 2 காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற பார்வையாளர்கள் கைத்தட்டியும், ஆவாரம் செய்தும் மாட்டு வண்டிகளை ஓட்டிச்சென்றவர்களை உற்சாகப்படுத்தினார்கள். இதனால் இந்த பந்தயம் களை கட்டியதுடன் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.