ஆதிச்சநல்லூரில்
மேலும் 7 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு.
சமூக ஆர்வலர்கள் உற்சாகம்.
செய்துங்கநல்லூர், 12.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் மேலும் 7 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது ஆதிச்சநல்லூர். இந்த பகுதியில் கடந்த 2002ம் ஆண்டு அகழாய்வு பணியானது நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் இந்த ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வு பணியானது கடந்த மே 25ம் தேதி தமிழக அரசு சார்பில் துவங்கப்பட்டது. அப்போது ஏரல் அருகே உள்ள சிவகளை பகுதியிலும் இந்த அகழாய்வு பணியானது துவங்கியது.
ஆதிச்சநல்லூரைப் பொறுத்தவரை தொல்லியல் துறை இயக்குனர் பாஸ்கர், ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட ஆய்வு குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூரைப்பொறுத்தவரை ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பு மற்றும் வெண்கலத்தாலான பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் ஏற்கனவே சுமார் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாண்டியராஜா கோவில் அருகில் தோண்டிய பள்ளத்தில் நேற்று 6 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 5 முதுமக்கள் தாழிகள் அருகருகே இருந்தன. அதில் 3 முதுமக்கள் தாழிகள் சிதைந்த நிலையில் இருந்தன. முதுமக்கள் தாழிகளின் அருகில் மண்பாண்ட கிண்ணங்களும் இருந்தன.
மேலும் கால்வாய் கிராமத்திற்கு செல்லும் சாலை பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் மற்றொரு முதுமக்கள் தாழி உள்ளது.
ஆதிச்சநல்லூர் கிராமம் பகுதியில் தோண்டிய குழியில் பெரிய மண்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் அங்கு பழங்கால மக்களின் வாழ்விடம் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உடைந்த மண்பாண்ட பொருட்களை, அருகில் உள்ள புளியங்குளம் முதுமக்கள் தாழி தகவல் மையத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.


