தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகே விசைப்படகு ஒன்று கடலில் மூழ்கிப் பதிந்துள்ளதால், மற்ற படகுகள் கடலுக்குள் செல்ல முடியாமல் 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி தருவைகுளம் அம்புரோஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் மைக்கில் ஜெய் சிங் (43). இவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 18-ஆம் தேதி தருவைகுளத்தில் இருந்து 8 மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குள் சென்றனர். விசைப்படகு தருவைகுளத்தில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பழுது ஏற்பட்டது. இதனால் கடல் நீரானது படகிற்குள் புகுந்து, பேட்டரி வரை ஏறியதால் விசைப்படகு கடலிலேயே செயலிழந்து நின்றது.
படகு பழுதானதை அடுத்து, அதன் ஓட்டுநர் நலன் ராஜ் உடனடியாகப் படகின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து உரிமையாளர் மைக்கில் ஜெய் சிங், வேறு ஒரு விசைப்படகை நடுக்கடலுக்கு அனுப்பிப் பழுதான படகைத் தருவைகுளத்திற்கு இழுத்து வர முற்பட்டார். ஆனால் எதிர்பாராத விதமாகப் படகை இழுத்து வந்த தடித்த கயிறு திடீரென நடுவழியில் அறுந்தது. ஆபத்தான நிலையை உணர்ந்ததால், விசைப்படகில் இருந்த 8 மீனவர்களும் மற்றொரு படகின் உதவியுடன் பத்திரமாகக் கரைக்குத் திரும்பினர்.
தொடர்ந்து நேற்று (ஜூலை 19) காலை இரண்டு இழுவை படகுகளை வைத்துப் பழுதான விசைப்படகைக் கரைக்கு இழுத்து வரும் பணிகள் நடைபெற்றன. மாலை நேரத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திற்கு மிக அருகில் வரும்போது, விசைப்படகு முழுவதும் நீர் புகுந்து கடலுக்குள் பதிந்து மூழ்கியது. இதனால் விசைப்படகை முழுமையாக இழுக்க முடியாமல் துறைமுக நுழைவாயில் பகுதியிலேயே அது சிக்கிக் கொண்டது.
இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மற்ற விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இன்று (ஜூலை 20) தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
துறைமுகத்தைச் சேர்ந்த 272 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது கடலில் மூழ்கியுள்ள விசைப்படகை அப்புறப்படுத்தும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் விபத்தால் தூத்துக்குடி பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


