திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுக்கும் சமூகவிரோத, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரைப் பகுதியில் காலி மதுபாட்டில்கள் குவிந்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, திருச்செந்தூர் உட்கோட்டக் காவல் துறையினர் கோவில் வளாகம், கடற்கரைப் பகுதிகளில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டு பலரைக் கைது செய்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில், கோவில் கடற்கரையில் காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பதாகச் சமூக வலைதளங்களில் பக்தர்கள் அதிர்ச்சியுடன் செய்தி வெளியிட்டிருந்தனர்.
இதன் எதிரொலியாகப் பக்தர்களின் பாதுகாப்பு, கோவில் வளாகத்தின் புனிதத் தன்மையைப் பேணும் பொருட்டு, திருச்செந்தூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினரால் உடனடியாகத் தீவிர கண்காணிப்பு, அதிரடிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் காவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுத் தொடர் ரோந்துப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் இதுவரை கோவில் வளாகத்தில் மது அருந்திப் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்திய 6 நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட (TNP Act) பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த 18 நபர்கள் மீது பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று (19.07.2026) மட்டும் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடிச் சோதனையில், கோவில் வளாகத்தில் பகிரங்கமாக மது அருந்திக்கொண்டிருந்த 4 நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், பிரிவு 4(1)(A)-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த 5 நபர்கள் மீது பிஎன்எஸ்எஸ் பிரிவு 170(1)-ன் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோவில் வளாகம், கடற்கரை பகுதி, அதை ஒட்டிய இடங்களில் கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுத் தொடர்ச்சியான ரோந்து, கண்காணிப்பு, திடீர் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பக்தர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவோர், புனிதத் தன்மையைக் கெடுக்கும் சமூகவிரோத, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.


