தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளத் துறைசார் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்றைய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உட்படப் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 582 மனுக்கள் பெறப்பட்டன.
மூத்த குடிமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் அவர்களிடம் இருந்து 22 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து அவர்களிடம் இருந்து 50 மனுக்களும் என மொத்தம் 654 மனுக்கள் இக்கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.37,436 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக, அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்த முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகள்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்குத் தலா ரூ.6,600 வீதம் மொத்தம் ரூ.13,200 மதிப்பீட்டில் மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இரமணன், முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் பெருமாள் (ஓய்வு), மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி உட்பட அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


