திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குற்றஞ்சாட்டினார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயர் டிஆர்பி ராஜாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை அவமதிக்கும் வகையில், பொய்யான செய்தியுடன் ஆபாசமான கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டது கண்டிக்கத்தக்கது.
திமுகவின் தொழில்நுட்ப பிரிவு அணிக்கு (ஐடி விங்) தடை விதிக்க வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேச திமுகவினருக்கு தகுதி கிடையாது. ஏனென்றால் அவர்களும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றவர்கள்தான். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது.திமுகவினர் தேர்தல் அறிக்கையில் கூறிய எதையும் செய்யவில்லை. அதிமுக மட்டுமே அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் வகையில் நல்லாட்சியை வழங்கியது என்றார்.


