இனாம் மணியாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், இனாம்மணியாச்சி செல்லியாரயம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மூக்கையா மகன் பரமசிவம். இவரது மனைவி பார்வதி. கூலித் தொழிலாளியான தம்பதி, நேற்று வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்களாம். இந்நிலையில் பார்வதி மதியம் வீட்டிற்கு வந்தாராம். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
வீட்டிற்கு சென்று பார்த்தபோது, பீரோ மற்றும் சூட்கேசில் இருந்த சுமார் 9 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.18 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


