நம் குடும்பத்துப் பெண் குழந்தைகளை வெளியூரில் கட்டிக்கொடுத்து, அவள் குடும்பத்தினை பார்க்கச் செல்லும் சுகமே தனி சுகம்தான். எனது அண்ணன் மகன் ரூபாவை இந்தகொரனா காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் உள்ள பூலான் விளையில் கட்டிக் கொடுத்தோம். மருமகன் அமல்ராஜ் அடிக்கடி என்னை ஊருக்குக் கூப்பிடுவார். மகள் வீட்டுக்குச் செல்லவேண்டும் என எனக்கு ஆசைத்தான். ஆனால் முடியவில்லை. இதற்கிடையில் குளச்சல் களப்பயணத்துக்குச் சென்ற போது மகள் வீட்டுக்குச் செல்லவேண்டும் என என்னுடைய நண்பர்களுடன் சென்றேன். நான் வந்திருக்கிறேன் என்றவுடன் மருமகன் எங்களை குளச்சலுக்கே தேடி வந்து விட்டார். அவர் வழிகாட்ட வீட்டுக்குக் சென்றோம். ரூபா வாசலில் வந்து வரவேற்றாள். பாலச்சுளை , மலைவாழைப்பழம், ஏத்தங்காய் சிப்ஸ் , அருமையான டீ என விருந்தில் அசத்தி விட்டாள். கை குழந்தையாக எதுவுமே தெரியாத அப்பாவியாக இருந்து மகள் இன்று ஒரு குடும்பத் தலைவி. மருமகன் ஓடிப் போய் பலாப் பழம் இரண்டை மரத்திலிருந்து பறித்துக் கொண்டு வந்து விட்டார்.நான் ஏற்கனவே இளைப்பாறும் நேரம் என்ற தலைப்பில் சிறு கதையெழுதியிருந்தேன். என் திருமணத்துக்கு முன்பே எழுதிய கதை. அந்த கதையில் பாசமாக வரும் மகள் மருமகளை அப்போது பார்த்தேன். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுற்றி வந்த களைப்பு மகள் தந்த தேநீரில் தீர்ந்து விட்டது. இது தான் பாசம். எங்கள் குழுவினர் மகள் மருகன், சம்பந்த காரர் மற்றும் நாங்கள் வாங்கி வந்த இரண்டு பலாப்பழத்துடன் எடுத்து க்கொண்டபடம் இதுதான். முக்கனி என்பார்களே அதை அவள் வீட்டில் பார்த்தேன். வாழ்த்துகள் மகளே – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


