
தாமிரபரணி ஆற்றில் மிகவும் பழமையான நீளமான மருதூர் அணை தூர் வாரப்படவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுதுள்ளனர்.
தாமிரபரணி நதியில் பாபநாசம் மேலணை, கீழணை தவிர மற்ற 7 அணைகளும் தடுப்பணைகளாகும். இதில் ஸ்ரீவைகுண்டம் அணையை தவிர அணைத்தும் நமது நாட்டை ஆண்ட சிற்றரசர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இவர்கள் அணை கட்டி எத்தனை ஆண்டுகள் ஆனாது என்று கணக்கிட முடியவில்லை. அணையைகட்டிய பின்பு அணையை தூர்வாரினார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தாமிரபரணி நதியில் கோடை மேலழிகியான் என்னும் தலையணை, நதியுண்ணி அணை, கன்னடியன் அணை, பழவூர் அணை, சுத்தமல்லி அணை ஆகிய ஐந்து அணைகள் மூலமாக நெல்லை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை மூலமாக சுமார் 44 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மருதூர் அணை வழியாக மட்டும் 20 ஆயிரத்து 762 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
மருதூர் அணையின் நீளம் 4097 அடியா-கும். இந்த அணையின் தலை மதகு 2 உள்ளது. இந்த மதகு வழியாக மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால் என இரண்டு கால்வாய்கள் பிரிகிறது. வெள்ளநீரை போக்க அணைக்கட்டில் மொத்தம் 12 மணல் வாரிகள் உள்ளது. இவை அனைத்துமே இன்றைய பொறியாளர்கள் பணிக்கு சவால் விடும் வண்ணம் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
மருதூர் மேலக்காலில் முத்தாலங்குறிச்சிகுளம், குட்டைக்கால் குளம், கொள்ளீர்குளம், நாட்டார்குளம், செய்துங்கநல்லூர், தூதுகுழிகுளம், கிருஷ்ணன்குளம், கருங்குளம், பெட்டைக்குளம், வீரளபேரி குளம், கால்வாய் குளம், வெள்ளூர் குளம், தென்கரைக்குளம், நொச்சிகுளம், கீழபுதுக்குளம், முதலைமொழிகுளம், வெள்ளரிக்காய்யூரணி குளம், தேமாங்குளம், ஆகிய குளங்களுக்கு பாசன வசதி பெருகிறது. மேலும் சாத்தான்குளத்தில் வறட்சி பகுதியான சடையனேரி மற்றும் புத்தன்தருவைக்கு இந்த கால்வாய்வழியாகத்தான் மழைகாலத்தல் வீணாக செல்லும் தண்ணீரை கொண்டு செல்கிறார்கள். மருதூர்மேலக்கால்வாய் மூலம் நேரடியாக 4 ஆயிரத்து 554 ஏக்கரும், குளத்து பாசனம் வழியாக 8 ஆயிரத்து 208 ஏக்கர் பாசனமும், ஆக 12 ஆயிரத்து 762 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.
மருதூர் கீழக்கால்வாயில் பட்டர்குளம், செந்திலாம்பண்ணைகுளம், பத்பநாப மங்கலம் மேலக்குளம், கீழக்குளம், பாட்டாக்குளம், பீக்கன் குளம், ரெங்கநாதன்புதுக்குளம், இசவன் குளம், கைலாசபேரிகுளம், கருமநேரி குளம், நெடுங்குளம், ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளம், பேரூர் குளம், சிவகளை குளம், பெருங்குளம் ஆகியவை பாசன வசதி பெருகிறது. நேரடி பாசனமாக 2 ஆயிரத்து 970 ஏக்கர் பாசமும் குளத்து பாசனம் வழியாக 4 ஆயிரத்து 815 ஏக்கரும் பாசன வசதி ஆக மொத்தம் 7 ஆயிரத்து 785 ஏக்கர் பாசன வசத பெறுகிறது.
இந்த அணை எப்போது கட்டியது என்று யாராலும் கணிக்க முடியவில்லை.1502 ஆண்டு இந்த அணை கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சமயத்தில் இந்த அணை கட்ட 60,122 ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளது. இதற்கிடையில் டாக்டர் கால்டுவெல் தனது திருநெல்வேலி சரித்திரத்தில் 1792 ஆம் ஆண்டு இந்த அணை திருப்பி அமைக்கப்பட்டது என்றும், இதை டோரின் என்பவர் கலெக்டராக இருந்த போது கட்டினார் என்றும் கூறுகிறார். இந்த அணை கர்னல் கால்டுவெல் என்பவரால் மீண்டும் 1807ல் திருத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அணையில் பொறுத்தப்பட்ட கல்வெட்டின் படி 1877ல் இருந்து 1878 வரை ஒரு மராமத்து பணி நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் பழமையான, அதே வே¬ளியல் நீளமான இந்த அணைக்கட்டில் உள்ள மணல் வாரிகளை தூர் வாரி மருதூர் மேலக்காலை தூர் வார 1996 ஆம் வருடம் 4 கோடி ரூபாயும், அதன் பின் 2002 ஆம் ஆண்டு 9 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடந்தது. மருதூர் கீழக்காலில் 1996 ஆம் ஆண்டு 1 கோடி ரூபாய் செலவில் மராமத்து செய்யப்பட்டது. மருதூர்மேலக்கால்வாய் வழியாக மழை நீரை சேகரிக்க சடையனேரி கால்வாய் 12 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் எல்லாம் நடந்தும் கூட மருதூர் அணைக்கட்டில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. அதற்கு காரணம் இந்த அணை தூர் வாராதது தான்.
இது குறித்து எழுத்தாளர்முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, 2001 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றஐ.ஏ.எஸ் அதிகாரி விஜயராகவன் தலைமையில் மூவர் கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு செய்த போது மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் இருந்து 100 கோடி கன அடி (1 டி.எம்.சி) தண்ணீர் வெளியே சென்றுள்ளது. என்று கணக்கிட்டுள்ளார். இதற்கு காரணம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாததுதான் காரணம். தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வார துவங்கி விட்டோம். மருதூர் அணையை தூர் வாரினால் மட்டும் தான் முழுமையாக மழைகாலத்தில் வீணாக செல்லும் தண்ணீரை தேக்க முடியும். எனவே மருதூர்அணையும் உடனே தூர் வாரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தாமிரபரணி நதியில் நீளமான மிக பழமையான இந்த அணை தாமிரபரணி, சித்தாறு, உப்பலோடைஎன்னும் கயத்தாரு ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே இந்த அணையின் நீர் பிடிப்பும் சுமார் 1 கிலோ மீட்டர் இருக்கும். அணைக்கட்டில் இருந்து சுமார் 1000 அடி வரை அரசு ஆற்று மணலை அள்ளி விட்டது. எனவே அணையை தூர் வாரிவிட்டால் இந்த பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்க ஏதுவாக இருக்கும் எனவே உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள்.
பூதம் கட்டிய அணைக்கட்டு
இந்த அணைக்கட்டு யார் காலத்தில் கட்டியது என்று தெரியவில்லை. ஆனால் பூதம் கட்டிய அணைக்கட்டு என்பார்கள். ஒரு காலத்தில் இந்த பகுதியில் வாழ்ந்த அரசன் இந்த இடத்தில் அணைகட்டை கட்ட ஆசைபட்டான். இந்த அணையை யார்கட்டுகிறார்களோ அவர்களுக்கு தனது மகளான சோழவள்ளி, மருதவள்ளி ஆகிய இரண்டு மகளையும் கட்டி தருவதாக அறிவித்தான். அப்போது வயதான சித்தர் ஒருவர் பூத படைகளுடன் ஒரே நாள் இரவில் இந்த அணையை கட்டி முடித்தார். ஆனால் அவரை மணமுடிக்க மறுத்த சகோதரிகள் அணையில் இருந்து விழுந்து இறந்துவிட்டார்கள். அவர்கள் நினைவாக மருதூர்அணையில் கோயில் உள்ளது. தற்போது மழை பெய்யவில்லை என்றால் இந்த பகுதி விவசாயிகள் இங்கு வந்த கிடாய் வெட்டி பொங்கலிடுகிறார்கள். அப்போது மழைபெய்யும் என்பது ஐதீகம்.
நேர்த்தியான கட்டிடம்
மருதூர் அணை நேர்த்தியான கட்டிடம். இதில் கல்லை அடுக்கிதான்கட்டியுள்ளார். இடையில் சிமெண்ட் பூச்சு எதுவும் இல்லை. கல்லோடு கல்லை அடுக்கி. சுண்ணாம்பு, கடுக்காய்,கருப்பட்டி, முட்டை கலந்த ஒரு வகையான கலவையில் மேல் பூச்சு பூசி உள்ளார்கள். இதை உடைக்க முடியவில்லை. ஆங்கிலேயர்கள் காலத்தில் பணி நடந்த போது இந்த கல்லை இரும்பு கம்பி கொண்டு பொறுத்தியுள்ளார்கள். 1996 ல் நடந்த பணியில் அணை மட்டத்தினை ஒன்றாக்க சிமெண்ட் மூலம் பணி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த அணை தூர் வாரப்படவில்லை என்பது குறிப்பிட தக்கது. தற்போது 4 அடி தண்ணீர் தேக்கும் நிலையில் அணை உள்ளது. தூர் வாரினால் சாதரணமாக6 அடியில் இருந்து 8 அடி வரை தண்ணீர் தேக்கலாம்.