தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழமையான ஊரணி ஓராண்டாகியும் திறக்கப்படாமல் தூர்ந்து போய் வீணாகக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
தூத்துக்குடி மாநகராட்சி 58-வது வார்டில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழமையான ஊரணி ஓராண்டாகியும் திறக்கப்படாமல் தூர்ந்து போய் வீணாகக் கிடப்பதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘அண்ணாமலையின் வீ தி லீடர்’ இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியுடன் கடந்த 2008-ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட அத்திமரப்பட்டி ஊராட்சியில் அமைந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊரணி, அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளின் பிரதான நீர் ஆதாரமாகவும், மழைநீர் சேமிப்பு மையமாகவும் விளங்கி வந்தது. மாநகராட்சி விரிவாக்கத்திற்குப் பின் அப்பகுதி தெற்கு மண்டலம் 58-வது வார்டாக மாறியது.
முள்ளக்காடு பேருந்து நிறுத்தத்திற்குப் பின்புறம் உள்ள இந்த ஊரணியைச் சீரமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாகப் பணிகள் நடைபெற்றன. ஆனால், பணிகள் நிறைவுற்ற பின்னரும் இதுவரை ஊரணி பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவில்லை. இதனால் பராமரிப்பின்றிப் பாழடைந்து மீண்டும் தூர்ந்துபோகும் அவல நிலையில் உள்ளது.
இது குறித்து ‘வீ தி லீடர்’ இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி உமரி எஸ். சத்தியசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்: சீரமைப்புப் பணியின் போது ஊரணி கரையில் நீண்டகாலமாக மக்கள் வழிபட்டு வந்த விநாயகர் கோவில் உள்நோக்கத்துடன் அகற்றப்பட்டுள்ளது.
பாலத்தின் மறுபுறம் உள்ள ஊரணிப் பகுதி கடந்த 18 ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. அதிகாரிகளின் துணையோடு இந்த நீர்நிலைப் பகுதியைத் தனியார ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் நேரடியாக நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். மக்கள் வரிப்பணம் வீணாகாமல் ஊரணியை முழுமையாகச் சீரமைத்து நடைபயிற்சிப் பாதையுடன் உடனடியாகத் திறக்க வேண்டும்.
மேலும், 18 ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாத மறுபகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றத் தங்கள் இயக்கம் தயாராக இருப்பதால், அதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


