முன்கதைச் சுருக்கம்
சுதந்திரப் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. காந்தியடிகள் ‘செய் அல்லது செத்துமடி’ எனப் போராட்டம் நடத்துகிறார். உப்புச் சத்தியாகிரகமும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேளையில், குலசேகரப்பட்டினம் உப்பள மேலாளர் லோன் துரையை நமது ஊர்க்காரர்கள் 27 பேர் இணைந்து கொலை செய்து விடுகிறார்கள்.மிகப்பரபரப்பான இந்தசம்பவம் நம்மை ஆளும் பிரிட்டிஷ் அரங்சாங்கத்தினையே மிரட்டி விட்டது. இதனால் அரண்ட போனார்கள் பிரிட்டிஷ காரர்கள். இதற்கிடையில் கொலையாளிகளை போலீசார் கைது செய்து விடுகிறார்கள். அவர்களை மீட்கப் பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன. காங்கிரஸ் காரர்கள் ஒவ்வொரு முயற்சி செய்து வருகிறார்கள். அதில் முக்கிய பங்கு வகித்து படுக்கப்பத்து மேகநாதன் தனி முயற்சி எடுத்துச் செயல்படுகிறான். போராட்ட காரர்களை காப்பாற்ற வேண்டும் என சென்னைக்கு இரயில் ஏறி விடுகிறான்.ராஜாஜியை பார்த்தால் இந்த பிரச்சனை தீரும் என அவன் நம்பினான். இனி…

மேகநாதன் போய் சென்னை ராஜாஜி வீட்டை அடைந்தான். அந்தவீடு மிக வித்தியாசமாக இருந்தது. இது வரை இவன் கண்ட பல விடுதலை போராட்ட வீரர்களைபோல அல்லாமல் ராஜாஜி வீடு மிக வித்தியாசமாகத்தான் இருந்தது. அந்த வீட்டில் பிராமண கலாச்சாரம் இருந்தது. தென் பகுதியில் ஒரு பனைதொழில் செய்யும் சமூகத்தில் மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் மேகநாதனுக்கு அந்த ஆச்சாரமான விடு அன்னியமாகத்தான் தெரிந்தது.
ராஜாஜி உதவியாளரை பார்த்தான் மேகநாதன்.
“நான் குலசேகரபட்டினம் வழக்கில் கைதான இரண்டு தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வந்து இருக்கிறேன்” என்று கூறினான்.
அவர் வயதானவர். அவரும் பூணூல் போட்டவர்தான். வித்தியாசமான மூக்குகண்ணாடி அணிந்து இருந்தார். கிட்டத்தட்ட வயோதிகமானவர். காந்தியடிகள் கண்ணாடி போலவே இவரும் மூக்கு கண்ணாடி அணிந்து இருந்தார்.
“இதுக்கு முன்னால நீ அய்யாவை பாத்து இருக்கீயா?” என்றார்.
“நான் காந்தியடிகளை பார்த்து இருக்கிறேன். எங்க கிராமத்துக்கு அவர் வந்து இருக்கிறார். அவர் கூட்டத்தில் எல்லாம் கலந்து இருக்கிறேன். ராஜாஜியை இதுவரை நான் பார்த்து இல்லை” என்றான் மேகநாதன்.
இப்படி உட்கார். நான் வருகிறேன் என உள்ளே சென்றார். அங்கிருந்து தந்தி ஒன்றை எடுத்து வந்தார்.
“இது தூத்துக்குடியில் இருந்து வந்த தந்தி. மு.சி. வீரபாகு பிள்ளை அனுப்பியிருக்கிறார்” என்றார்.
சிரித்துக்கொண்டான் மேகநாதன்.
“நீ வீரபாகு பிள்ளையை பார்த்தியா?”
“தூத்துக்குடியில் வைத்து பார்த்தேன். அவரிடம் இதை பத்தி மகஜார் கொடுத்து விட்டுத்தான் மதராஸ் வந்தேன். அவர் ராஜாஜி அய்யாவை பார்க்கச்சொன்னார்”.
“ம். ராஜாஜி சொன்னார். தூத்துக்குடியில் இருந்து ஒருவன் வருவான். அவனை இருக்கச்சொல் என்று கூறியிருக்கிறார். இங்கேயே இரு”. என்று கூறினார் அந்த வயோதிகர்.
வீரபாகு பிள்ளை ஏன் இதில் தலையிட வேண்டும். என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
அவரிடம் இந்த கொலை வழக்கைப்பற்றி யார் பேசியிருப்பார்.
சாட்சாத் மேகநாதன் தான். அவன் சென்னை கிளம்பும் முன்பே தூத்துக்குடி சென்று வீரபாகு பிள்ளையை பார்த்துவிட்டான்.
வீரபாகு பிள்ளை 1903-ல் தூத்துக்குடியில் பிறந்தவர். தூத்துக்குடியில் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பம். இவரது தந்தை சிதம்பரம் பிள்ளை கொழும்பு நகரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். செல்வம் கொழுக்கும் பூமி என்ற காரணத்தினால் இவருக்கு சிறப்பான கல்வி அறிவை போதித்தார் தந்தை.
தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் தான் இவரது பள்ளிபடிப்பு துவங்கியது. திருநெல்வேலியில் பாரதியார் படித்த ம. தி.தா. இந்துக்கல்லூரியில்தான் இவரது படிப்பு தொடர்ந்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் இவர் படித்தார். இவருக்கு சட்டம் மீது அதிகமான பற்று. எனவே வழக்கறிஞராக ஆக வேண்டும் என்பது தீராத ஆசை. எனவே 1927 இவர் சட்டம் பயின்றார்.

சட்டம் பயின்று வழக்கறிஞராக பணியாற்றத் துவங்கினார். 1928 இல் இருந்து 1929 வரைஇவர் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே நாட்டு மீது சுதந்திர பற்று அதிகரித்தது. இதனால் இவர் சுதந்திர போராட்டத்தின் மீது ஆர்வம் கொண்டார்.
செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்த காரணத்தினாலும் இவரது சொந்த காரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை தீவிர சுதந்திரபோராட்ட வீரர் என்ற காரணத்தினாலும் இவருக்கு இயல்பாகவே அன்னியசக்தியை எதிர்க்கும் நிலை ஏற்பட்டது. அவர் சூழ்நிலையும் வளர்ப்பும் சுதந்திர போராட்டத்தின் மீது தீவிர காதலைவளர்த்தது.
தான் பள்ளிக்கூடம் படிக்கும் போதே அன்னிய துணி மணிகளை அணியக்கூடாது என கதர் விற்பனையில் ஈடுபட்டவர். என். எஸ். வரதாச்சாரி கதர்க் கடையில் பணியாற்றிய சமயம் அதுவாக இருந்தது. அந்த காலத்திலேயே இவர் பல விடுதலை போராட்ட கமிட்டியில் ஈடுபட்டார். 1931&ல் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அரசியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு வரவேற்புக் கமிட்டித் தலைவராய் பணியாற்றினார். இவர் இளம் வயது. இவர் பணியாற்றி வேகம். இவரது விடுதலை வேள்வி இதையெல்லாம் கண்ட ராஜாஜி இவர் மீது அதிகமான அபிமானத்தினை வைத்து விட்டார். கிட்டதட்ட ராஜாஜிக்கு தூத்துக்குடியில் அபிமானமாக உள்ளவர்கள் பலரில் வீரபாகு பிள்ளை மிக முக்கிய இடத்தினை பிடித்து விட்டார்.
ராஜாஜி தலைமை தாங்கிய அம் மாநாட்டின் வெற்றி, வீரபாகு பிள்ளை எதைச்சொன்னாலும் கேட்க கூடிய நிலையில் ராஜாஜி இருந்தார்.
குலசேகரபட்டினம் லோன் துரை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தூக்கு தண்டனையில் இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் ராஜாஜியால் தான் முடியும். அப்படி ராஜாஜியை அனுக வேண்டும் என்றால் வீரபாகு பிள்ளையின் உதவி தேவை என்பதை மேகநாதன் அறிந்து இருந்தான்.
ஆகவே தான் ராஜாஜியை பார்க்க வேண்டும் என்றவுடனே முதல் கட்டமாக வீரபாகு பிள்ளையை பார்த்தான்.
வீரபாகு பிள்ளை சுதந்திரத்திற்காக பட்டுக்கொண்டிருக்கும் பாடு பெரும்பாடு. அதில் பல உண்டு. அதில் சிலவற்றை மட்டுமே நாம் பேச இயலுகிறது.
வீரபாகு பிள்ளையை பொறுத்தவரை தூத்துக்குடியில் செயல்பட்ட Ôசிவில் லீக்’ என்ற சங்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த சங்கத்தில் போராட்ட வீரர்கள் மாசிலாமணி பிள்ளை, சுப்பையர், கல்யாணசுந்தரம் செட்டியார் போன்றவர்களுடன் சேர்த்து செயல்பட்டு வந்தார். தூத்துக்குடி நகரசபைக்கு சிவில் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோற்றுவிட்டார். இதனால் அவர் மனம் உடையவில்லை . பொதுப்பணியை விட்டு விடுபட்டு விடவில்லை. பொதுப்பணி வேலையில் கண்ணும் கருத்துமாய் ஈடுபட்டிருந்தார்.
இந்த பணிக்£க 1935-ல் இருந்து வக்கீல் தொழிலை நிறுத்திக் கொண்டார். இவரின் உழைப்பு மேல்மட்டத்துக்கு நன்றாக தெரிந்தது. டாக்டர் சங்கரய்யரின் வற்புறுத்தலினால் ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1934-ல் பொறுப்பேற்றார். திருநெல்வேலி ஜில்லா என்றால் அப்போது மிகப்பெரிய ஜில்லா. அந்த கால கட்டத்தில் ஜில்லாவெங்கும் காங்கிரஸ் பணிகளைத் தொடங்கினார். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம காங்கிரஸ் கமிட்டிகளை நிறுவினார். காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் சேர்த்தார். இதனால் நெல்லை ஜில்லாவில் காங்கிரஸ் சிறப்பாக காலூன்றியது.
1935-ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராஜன் பாபு இருந்தார். அவருடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுப் பணிபுரிந் தார். இதனால் தமிழகம் முழுவதும் அறிந்த நபராக வீரபாகு பிள்ளை மாறி விட்டார். 1938-ல் களக்காடு தொகுதியில் போட்டியின்றி ஜில்லா போர்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938 டிசம்பர் 8-ம் தேதி ஜில்லா போர்டுக்குத் தலைவரானார்.
பொதுவாக அக்காலத்தில் இந்த வாரியங்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் வரை நீடித்தது. அவர் தலைவராக இருந்த காலகட்டத்தில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புகழ்பெற்ற வல்லநாடு பாலத்தைக் கட்டுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
பிற்காலத்தில் நாடு சுதந்திரம் அடைந்த பின் இந்தியாவின் இடைக்கால நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1950 & – 1952 காலகட்டத்தில் பணியாற்றியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவிலும் இடம் பெற்று கையெழுத்திட்ட பெருமைக்குரியவர் ஆவார்.
ஜில்லா போர்டு தலைவராக இருந்த காலத்திலும் கூட இவர் சுதந்திர போராட்டத்தினை கைவிடவே இல்லை. இவரின் சுதந்திர வேட்கை சிறகடித்து பறந்தது.
1940 ஆம் ஆண்டு டிசம்பர் 8-ம்தேதி யுத்த மறுப்பு சத்தியாக்கிரகம் செய்ய காந்தி அறிவித்து இருந்தார். தூத்துக்குடியில் இவர் சத்தியாக்கிரகம் நடத்தினார். இதற்காக சிறைத் தண்டனை அடைந்தார். மனது உடைந்து விட வில்லை. எப்படியும் இந்தியா சுதந்திரம் அடைந்து விடும் என நம்பிக்கையோடு இருந்தார். சிறைவாசம் முடிந்தது. வெளியே வந்தவுடன் ஜில்லாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சக்தியை ஒருங்கே சேரவைத்தார். 1946 தேர்தலில் பெரிய வெற்றியைத் தேடித்தந்தார்.
1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. மேகநாதன் ராஜாஜி சந்திப்புக்கு பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகும் கூட பல்வேறு பதவிகளை வகித்தவர் வீரபாகு பிள்ளை. அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினரானார். அதன்பின் பார்லிமெண்டுக்கும் உறுப்பினராகி போக்குவரத்து கமிட்டி, காமர்ஸ் கமிட்டி, டெக் பாஸஞ்சர் கமிட்டிகளில் அங்கம் வகித்துப் பணி செய்தார்.
வ.உ.சி. கப்பல் கம்பெனியை மீண்டும் தோற்றுவித்து 1948&-53-ல் செயல்பட வைத்தது குறிப்பிடத்தக்க பணியில் ஒன்றாகும். எல்லாத் துறை களிலும் நண்பராக உள்ள பல பெரியவர்களையும் அணுகி எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு கடைசி மூச்சுவரை காந்தியப் பணிகளில் செயல்பட்ட தலைவர்களில் இவரும் ஒருவராவர்.
தூத்துக்குடியில் இன்று சுதந்திர போராட்டம் என கூறினால் வீரபாகு பிள்ளையை தவிர்த்து வரலாறு கூறி விட முடியாது.
சரி. ராஜாஜி வீட்டில் மேகநாதன் காத்துக்கொண்டிருக்கிறான். அவன் ராஜாஜியை பார்த்தானா? என்ன நடந்தது என அறிய ஆவலாக உள்ளோம்.
ஏன் என்றால் தூக்கு மேடையை முத்தமிட தயாராக இருக்கும் இருவரை காப்பாற்ற வேண்டும். முடியுமா? ஆங்கிலேய ஆட்சி இவர்களை விட்டு விடுமா?
பெரியவர் வந்தார்.
“இன்றைக்கு ராஜாஜியை பார்க்க முடியாது?”
மேகநாதன் அதிர்ந்தான்.
“இன்னொரு நாள் வா”.
பதில் கூற இயலவில்லை. ஆனாலும் வீட்டை விட்டு வெளியே வந்தான்.
******

ராஜாஜியை காண செல்லும் மேகநாதன் வாலிபனாக இருக்கிறான். ஆகவே அவன் எந்த அளவுக்கு காரியத்தினை சாதிப்பான் என புரியாமல் இந்த காரியத்தினை நடந்த கிட்டு என்ற வெங்கடகிருஷ்ணனுக்கு தந்தியும் அனுப்பியிருந்தார்.
அந்த தந்தியில் உன்னை தேடி ஒருவன் வருவான். அவனை ராஜாஜி வீட்டுக்கு கூட்டி சென்று வேண்டிய உதவிகளை செய் என கூறியிருந்தார்.
கிட்டு என்று வெங்கிட கிருஷ்ணன். இவர் யார்?. இவரை ஏன் ராஜாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.
ஏற்கனேவ மேகநாதனுக்கு பரிச்சயமானவர்தான் இந்த கிட்டு அய்யர். திருச்செந்தூர் ஜெயிலில் மேகநாதனை பிடித்து வைத்திருக்கும் போது கிட்டு அய்யர்தான் அவரை காப்பாற்ற நேரில் வந்து இருந்தார். ஆகவே மேகநாதனுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்தான்.
ஆனாலும் இவர் சுதந்திர போராட்டத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என நமக்கு தெரியவேண்டும் அல்லவா–?.
இவர் யார்? இவருக்கும் வீரபாகுவுக்கும் என்ன சம்பந்தம். நிச்சயம் தெரிந்து ஆக வேண்டும் அல்லவா? அப்போது தான் அவர் ஏன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார் என்று புரியும் .
கிட்டு கல்லூரியில் படிக்கும் பொழுதே தேசிய இயக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர். 1925-லிருந்து கதர் அணியத் தொடங்கினார். இந்த ஒரு தகவலே அவருடைய சிறப்பை பெருமைப்பட வைத்து விடும்.
1926-&இல் ஜஸ்டிஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நடைபெற்ற தேர்தலில் படிப்பையும் மறந்து தீவிரமாக ஈடுபட்டார். தேர்தல் பிரசாரத்திற்காக வரும் தலைவர்களை உபசரித்து பாதுகாப்பாக அருகிலேயே இருப்பார். 1950 பி.ஏ. படிப்பு முடித்ததும் வேலை தேடாமல் பொதுவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1930&1932-ல் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல், ஜவுளிக்கடை மறியல் போராட்டங்களுக்கு முன்னேற்பாடுகள் செய்தவர் இவர் தான். சமாதான சத்தியாக்கிரக மறியல் பிரசாரத்தை சிறந்த முறையில் நடத்த ‘கிருஷ்ணா ஸ்டோர்’ என்ற ஒரு ஸ்தாபனத்தை நிறுவி, கதர் மற்றும் சுதேசிப் பொருள்களை வியாபாரம் செய்யும் முழுநேர ஊழியனாகப் பணியாற்றி வந்தார்.
இரண்டு வருடங்களிலும் நாட்டிலுள்ள சுதேசி கண்ணாடி சாமான்கள், காகிதம், பவுண்டன் பேனா, பென்சில், கார்பன் பேப்பர் முதலியவைகளை ஜில்லாவெங்கும் விற்பனை செய்து சுதேசிப் பொருள்களுக்கு ஒரு கிராக்கி ஏற்படுத்தினார். 1931&இல் விக்டோரியா தெருவில் சுதேசிப் பொருட்காட்சி ஏற்பாடு செய்து நம் நாட்டில் என்னென்ன பொருள்கள் எவ்வளவு நேர்த்தியாக உற்பத்தியாகின்றன என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டினார்.
இது அவருக்கு கூடுதல் சிறப்பாகும்.
1935, 1938&இல் ஜில்லாபோர்டு தேர்தல்களில் எம். சி. வீரபாகுப் பிள்ளையோடு கடுமையாக உழைத்தார். 1994-ல் மகாத்மா தூத்துக்குடிக்கு வந்திருந்தபொழுது அவரது சொந்தத் தேவைகளையெல்லாம் அக்கறையோடு கவனித்தார். பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற பெரிதும் பாடுபட்டார். மகாத்மா துவக்கிவைத்த அரிஜன விடுதியை 1954லிருந்து 1972-வரை திறம்பட நடத்திவந்தார். கதர்ப்பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். வீடு வீடாகச்சென்று கதர் அணியாதவர்களையும் கதர் அணியச்செய்தார்.

சண்முகபுரம் கிராமத்தில் 1000-க்கு மேற்பட்ட ராட்டினங்களை ஓட்டி கதர் ஆடை உற்பத்தி செய்து கதர் இயக்கத்தை வளர்த்தார். காந்தி &- இர்வின் ஒப்பந்தப்படி உப்புச் சட்டம் தளர்த்தப்பட்டதும், நடைமுறையில் பல சிக்கல் ஏற்பட்டது. காந்திஜி, ராஜாஜி ஆகியோரின் ஆலோசனை யின்பேரில் மத்திய சுங்க & உப்பு கமிஷனரை வரவழைத்து ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்திய பெருமை இவரைச் சாரும்.
1940 தனிப்பட்ட நபர் சத்திய கிரகத்தின்போது கலந்துகொண்ட தொண்டர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பது இவரது வேலை. ஒரு வேளை அவர்கள் சிறையில் மாட்டிக்கொண்டார்கள் என்றால், அவர்கள் சிறையிலிருந்து திரும்பி வரும் வரை அவர்களது குடும்பங் களைப் பராமரிப்பது போன்ற உதவிகளைச் செய்துவந்தார். 1942&இ-ல் தூத்துக்குடியில் மாகாண காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தைச் சிறப்பாக நடத்தினார். இம்மாகாண கமிட்டி கூட்டத்தில்தான் ராஜாஜிக்கும் சத்தியமூர்த்திக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டது. இதனால் தான் பிற்காலத்தில் சத்திய மூர்த்தியின் சிஷ்யரான காமராஜர் ராஜாஜியின் எதிர் தளத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனாலும் கிட்டு மிக வித்தியாசமானவர்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற பொதுக் காரியங்கள் அனைத்திலும் இவர் கலந்துகொள்ளாத இயக்கம் இல்லை. எனினும் இவர் எந்தப் பதவியும் வகிக்கவில்லை.
‘ஹிந்து’ பத்திரிகையின் நிருபராக இவர் பணியாற்றினார். 1942 போராட்டங்களின் போது, ஒருவரும் சந்தேகப்படா வண்ணம் போராட்டங்களுக்கான திட்டங்களை இவர் தான் வகுத்து கொடுத்தார். சர்க்குலர்கள் அனுப்பியும், போராட்டம் நடைபெறும் இடங்களுக்குச்சென்று உதவியும் புரிந்தார்.
ஆனால் ஆங்கியேல அரசு எளிதில் இவரை தப்பிக்க விடுமா? என்ன?. இவர்தான் எதிரணியில் நிற்கிறார் என அறிந்து கொண்டனர். திடீரென்று இவரது வீடு சோதனை யிடப்பெற்றது. கைது செய்யப்பட்ட இவர் 2 வருடம் தண்டனை பெற்றார். சிறையிலிருந்து விடுதலையடைந்ததும், விடுதலையடையாதவர்களுக்காகப் பாடுபட்டார். தேசபக்தி மிகுந்தவராக, சமுதாயத் தொண்டராக வாழ்ந்துவந்தார். தொழிலாளர் களுக்கு சேவைசெய்து வருவதோடு, அத்தனை பொதுக்காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்தி அயராது உழைத்துவந்த தேசப்பக்தர்.
குலசேகரபட்டினம் லோன் துரை கொலை வழக்கில் தண்டனை பெற்றோர் குடும்பத்தினை காப்பாற்ற வேண்டி நேரடியாக சென்று பல உதவிகளை செய்துகொண்டிருந்தார்.
இவருக்கு ராஜாஜி வீட்டிலும் நெருக்கம் உண்டு. கொலை வழக்கில் சிக்கியவர்கள் வீட்டிலும் தொடர்பு உண்டு.ஆகவே இந்த வேலையை செய்ய தகுதியானவர் இவர் தான் என வீரபாகு பிள்ளை முடிவு செய்தார். அதோடு மட்டுமல்லாமல் மேகநாதன் இவருக்கு உதவியாக இருந்து அனைத்து வேலையையும் கன கச்சிதமாக செய்து முடிப்பார் என நம்பினார்.
நிச்சயம் இந்தியா சுதந்திர அடையும். தூக்கு தண்டனை கைதியான இருவரும் மீண்டு வருவார்கள் என நம்பிக்கையும் பிறந்தது.
*******
கிட்டு காவல் கைதியாக தஞ்சாவூர் சிறையிலிருந்து விடுதலையான உடன் நேராகத் தூத்துக்குடிக்கு வராமல் சக கைதிகள் சம்பந்தமாக சர்க்காரிடம் சில காரியங்களைக் கவனிக்க சென்னை சென்றார்.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குப் புறப்படும் நாளில் தான் தூத்துக்குடியில் இருந்து தந்தி வந்தது. அந்த தந்தியில் “புறப் படாதே. நண்பர் ஒருவர் வருகிறார். அவரை சந்தித்து ஆவன செய்” என்று எழுதியிருந்தது. அந்த தந்தி மு. சி. வீரபாகு அனுப்பியிருந்தார்.
கவலை ரேகையுடன் “யார் இந்த நண்பர், என்ன காரியம்” என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
“சரி யாரோ ஒருவர் வருகிறார். அவர்களுக்கு நிச்சயம் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறது. அதை தீர்த்து விட்டு ஊருக்கு செல்லலாம்” என முடிவு செய்தார்.
இரண்டு நாள்கள் கழித்தது, குலசேகரப்பட்டிணம் லோன்துரை கொலைக் கேசில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ராஜகோபால் அவர்களின் சிறிய தகப்பனார், வீரபாகு அவர்களிடமிருந்து ஒரு கடிதத்துடன், கிட்டுவை வந்து சந்தித்தார்கள்.
வீரபாகு அவர்கள், “என்னாலியன்ற அளவு ஜில்லாக் கோர்ட்டிலும், ஹைக்கோர்ட்டிலும் வழக்கிற்கு வாதாட பணம் வசூலித்துக் கொடுத்து கேசை நடத்தினேன். ஜில்லா கோர்ட்டில் காசிராஜன், ராஜகோபால் இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, ஹைக் கோர்ட்டிலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது. மேற்கொண்டு பிரிவில் கவுன்சிலில் தான் அப்பீல் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் இருபதினாயிரம் ரூபாய் தேவைப்படும். அதை நீதான் வசூலித்து கேசு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். காவல் கைதியாக இருந்து விடுதலையடைந்ததால் உன்னிடம் தாண்யம் இருக்கும். மாகாணத்திலுள்ள பெரும் தனவந்தர்களைச் சந்தித்து வசூல் செய்து கேசு நடத்த வேண்டியது இனி உன் பொறுப்பு” என்று எழுதியிருந்தார்கள்.
கிட்டு அதிர்ந்தே போய் விட்டார். “ஆகா. இவர் தான் ராஜகோபால் அவர்களின் சிறிய தந்தை. லோன் துரை கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இருவர். இவர்களை காப்பாற்ற இயலுமா?”
இதுவரை ஆங்கிலேய அரசு தண்டனை விதித்தவர்கள் சும்மா விட்டது இல்லையே. அப்படி இருக்கும்போது நிச்சயம் அவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதி. ஒரு வேளை நாடு சுதந்திரம் அடைந்து விட்டால், தண்டனை தீர்ந்து விடும். அதுவும் உடனடியாக இயலாது. பல வழக்கு தள்ளிப்போய்த்தான் ஒரு வேளை முடிவு ஆகலாம்.
அப்படியென்றால் இது சாதாரண பிரச்சனை இல்லை. பெரும் பிரச்சனை. இந்த பிரச்சனையை எப்படியாவது தீர்க்கவேண்டும். வீரபாகு அய்யா என்னிடம் இவர்களை அனுப்பியுள்ளார்களே ஏன்?”
யோசித்துக்கொண்டிருந்தார் கிட்டு, “ வீரபாகுவை விட எனக்கு அதிக செல்வாக்கு ராஜாஜியிடம் இருந்தது என அவரே கருதியதில்லை”.
அய்யோ இது எவ்வளவு பெரிய பொறுப்பு. என்னால் முடியுமா? சரி. பணம் பிரிக்க இயலாது. இதை பற்றி பேச வேண்டும் என்றால் உடனே காந்திஜிக்கு இது குறித்து கடிதம் எழுதுவோம். நிச்சயம் நல்லதே நடக்கும். என்று முடிவுசெய்து காந்திஜிக்கு கடிதம் எழுதினார்.
****
மறுநாள்.
மேகநாதன் ராஜாஜி வீட்டுக்குள் நுழைந்தான்.
அங்கே அவளை அழகான தேவதை ஒருவள் நின்று கொண்டிருந்தாள்.
“யார் நீங்க?”
அந்த பெண்ணை பார்த்தவுடன் இமை அசையாமல் அப்படியே நின்று விட்டான் மேகநாதன்.
ஆகா. அழகு தேவதை இவளோ? வானத்து வண்ண நிலவு ஒன்று பட்டபகலில் இங்கே நம் முன்காட்சியளிக்கிறதோ- என்று தன்னை அறியாமலேயே திக் பிரமை பிடித்து நின்றான்.
இது வரை பெண்ணாசை மண்ணாசை அறியாமல் இருந்தவன். சுதந்திரம் எனது உரிமை என பேசிக்கொண்டு திரிந்தவன். எந்த பெண்களையும் ஏறிட்டு பார்க்காதவன்.
இவளை பார்த்தவுடன் ஏன் இப்படி நாணி கோணுகிறான்.
என்ன நடக்கிறது இங்கே. இவள் குரல்கூடஅவனுக்கு முதலில் கேட்கவில்லை.
அவள் அழுத்தி பேசியபடி கேட்டாள்.
“யார் நீங்க. உங்களுக்கு யார்வேணும்?”
அவளின் தேனினும் இனிமையான குரல் இவனை அடிமையாக்கியது.
திரும்பவும் பேசமாட்டாளா? அவள் குரலை கேட்காமல் இருக்கலாமா? என யோசிக்க தோன்றினான்.
அசைவற்று நின்ற அவனை மீண்டும் அவள் -குரல் எழுப்பியது.
இப்போது இவன் பதில் சொன்னான். “அய்யாவை பார்க்க தின்னவேலியில இருந்து வந்திருக்கேன்”.
“ம். வாருங்கள்”. வரண்டாவில் உள்ள சேர் ஒன்றை காண்பித்தாள். “உட்காருங்கள்”.
உள்ளே சிட்டாய் பறந்து விட்டாள்.
அவளை பார்க்கும் போது இவன் மனம் ஏதோ போல் ஆனது.
“யார் இவள். இவளுக்கு எனக்கும் என்ன சம்பந்தம். ஏன் இவளை பார்த்தவுடன் நான் இப்படி ஆகி விட்டேன்”.
“இது தான் காதலா? அவளை நான் நேசிக்கிறனோ?”
“அட. இதுக்கு முன்னால் நான் இவளை பார்க்கவே இல்லையே. பிறகு ஏன் இதுபோன்று தோன்றுகிறது”.
“இது தவறு அல்லவா?”
நான் எதற்காக வந்து இருக்கிறேன். தூக்கில் தொங்க போகும் இரண்டு இளைஞர்களை காப்பாற்ற வந்து இருக்கிறேன்.
வந்த வேலையை விட்டு விட்டு, இந்த வேளையில் இந்த எண்ணம் ஏன் வருகிறது.
“ஏலேய் மேகநாதா இரண்டு உயிரை காப்பாற்ற வந்து இருக்க. இங்க வந்து உனக்கு காதல் வருதா? அட அறிவு கெட்டவனே ஒழுங்கா இரு”.
என அவன் மனசாட்சி அவனிடம் பேசியது. ஆனால் அந்த மனசாட்சியை விட அவனின் இளமை வெல்லுவது போல இருந்தது.
விழுந்து விட்டான் மேகநாதன். இதுவரை சுதந்திரம் போராட்டம், அது இது என போலிசுக்கு டிமிக்கி கொடுத்தவன். போலிசுக்கு தண்ணி காட்டி ஓடி ஓடி மறைந்தவன். இங்கே இந்த பெண்ணிடம் சரண்டர் ஆகி விட்டான்.
“இவள் யாரு. இவளுக்கும் நமக்கு என்ன சம்பந்தம். இவளை எனக்கு ஏன் பார்த்தவுடன் பிடிக்கிறது. ஆகா இயற்கை இவளை சந்திக்க த்தான் என்னை இங்கே அனுப்பி யிருக்கிறதா?”
பலவிதமாக யோசித்தான்.
நாம் வந்திருப்பதோ. புது இடம். இந்த இடத்தில் காதல் தேவையா? யோசித்தான்.
ஆனால் அவனுக்கு அவளின் புன்சிரிப்பும், அவளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றி விட்டது. எனவே அவனை அறியாமலேயே அவளிடம் அவனை கொடுத்து விட்டான்.
இது எங்கேபோய் முடிவடைகிறதோ தெரியவில்லை.
****
ஆறுமுகநேரியில் ராஜகோபாலின் தாயார் அழுது புலம் பிக்கொண்டிருக்கிறார்.
“இங்கே பாரு இவளே. உன் மவன் எப்படி தப்பிச்சி வருவான். துரையை சுட்டு கொன்னு இருக்கான். ஆங்கிலேயே அரசு அவனுக்கு தூக்கு தண்டனை விதிச்சிருக்கு. இப்படி இருக்கும் போது எப்படி அவன் தப்பிப்பான்”
பக்கத்து வீட்டு கிழவி வேறு பீதியை கிளப்பி விட்டுக்கொண்டிருந்தாள்.
அப்போது தான் ரா-ஜகோபாலின் சித்தப்பா வீட்டுக்குள் நுழைந்தார்.
“தம்பி என்னாச்சி” அ-ழுது அழுது சிவந்த கண்களுடன் இருந்தாள் சேர்மக்கனி.

“மயினி நான் எவ்வளவோ முயற்சி செஞ்சிட்டேன். ராஜகோபாலுக்கும், காசிராஜனுக்கும் தூக்குதண்டனை உறுதின்னு சொல்லிட்டாவ. அவிய இரண்டு பேரையும் காப்பாத்த முடியாது போல” விம்மினார். தாய் மனசு கேட்டுகுமா? அந்த பெண்ணோ கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டாள்.
அக்கம் பக்கத்தில் வந்து நின்றவர்கள். அவர்கள் பங்குக்கு ஒப்பாரி வைக்க அந்த இடமே சோகம் நிறைந்த ஒரு இடமாக மாறி விட்டது.
அழுது முடியட்டும் என அமைதியாக இருந்தனர்.
“அய்யோ மகனே ராஜகோபாலு. உன்னை காப்பாற்ற என் தலையையும் அடகு வைக்க தயாராக இருக்கிறேன் மகனே. திருச்செந்தூர் முருகா. என் பிள்ளைகளை காப்பாற்றப்பா. யய்யா கொழுந்த பிள்ளை எப்படியாவது முயற்சி பண்ணுய்யா எப்படியாவது பிள்ளையலை காப்பாத்துய்யா”.
சித்தப்பா விரக்தியாக பேசினார். – “அடுத்தவேளை சோத்துக்கு கூட வழியில்லாமல் நாம் காய்ஞ்சி போய் கிடக்கிறோம். இருவர் தூக்குதண்டனையை நோக்கி காத்து இருக்காவ. இங்கே இருக்கும் பிள்ளைகள் எல்லாம் வறுமையில் வாடி கிடக்காவ. இவியளை காப்பாத்தவா? இல்லை உயிருக்கு பேராடுதவளை காப்பாத்தவா? அய்யோ யாரை காப்பாத்துவது”.
வறுமை கொடியது தான். அதைவிட அடிமைத்தான் கொடுமையானது. அதற்காக இரண்டு உயிரை விட்டு விட முடியுமா? நமது கண் முன்னாலே அவர்கள் இவரையும் தூக்கில் போட விட முடியுமா?.
“என்ன செய்து விட்டான் என் பிள்ளை. எங்கே இருந்தோ இங்கு வந்து அரஜாக்கம் செய்த துரையை அடித்து பயமுறுத்தத்தான் போனான். அவன் போறாத காலம் துரை செத்து போயிட்டான். அதில 27 பேர் இருந்து இருக்காவ. ஆனா இரண்டு பேருக்கும் மட்டும் தூக்கு தண்டனையா என்ன? இவனுவளையும் ஜெயில போட வேண்டியது தானே. இப்படி உயிரை ஊசலாட விட்டுட்டாங்களே”
பெத்த மனம் கேட்டுமா? “அய்யா ஏதாவது செய் அய்யா. எப்படியாவது பிள்ளையளை காப்பாத்து அய்யா. கொழுந்த பிள்ளை ஏதாவது நடவடிக்கை எடுய்யா”
கெஞ்சினாள் தாய்.
“மயினி ஏற்கனவே- எடுத்துருக்கேன் மயினி. தூத்துக்குடி வீரபாகு பிள்ளை அய்யா மூலமாக கிட்டுன்னு சொல்லுத கிருஷ்ணன் அய்யர் மூலமாக காந்திஜிக்கு கடிதம் எழுதியிருக்கோம். நிச்சயம் நல்லது நடக்கும். அதுக்குள்ள நாடு சுதந்திரம் அடைஞ்சாலும் ரொம்ப நல்லது நடக்கும்”.
விரக்தியாகவே பேசினார் சித்தப்பா.
“முருகா, செந்தில் வேலா என் பிள்ளைகள் மட்டும் இல்லை இந்த நாட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாக விடாமல் தடுக்க இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தா. சூரனை சம்காரம் செய்த நீ. வெள்ளையனை சம்காரம் செய்து நீதியை நிலை நாட்டு”.
அவள் கதறல் அருகில் திருச்செந்தூர் கடற்கரையில் இருக்கும் முருகப்பெருமானுக்கு கேட்டுகுமா?. தூக்குத் தண்டனை கைதி இரண்டு பேரும் தப்பிப்பாங்களா?
*****
நண்பர் வீட்டில் இருந்தான் மேகநாதன். மனதோ தவித்துக்கொண்டிருந்தது.
இன்றைக்கும் ராஜாஜியை பார்க்க முடிய வில்லை. அவர் இன்றைக்கும் வரவில்லை யென்றார்கள்.
இப்போது இவன் மனம் வேறு மாதிரி பேச ஆரம்பித்து விட்டது.
அந்த பெண் யாராக இருக்கும். அந்த பெண் ஒருவேளை ரா-ஜாஜியின் மகளாக இருப்பாளோ?
இது தேவையா?. உதவி கேட்க வந்த இடத்தில் இதெல்லாம் தேவையா?
நண்பனிடம் கேட்டான். “ராஜாஜிக்கு மகள் இருக்கிறார்களா?”
“ஆமாம் அதற்கென”.
“இல்லை கேட்டேன்”.
“அந்த பொண்ணுக்கு திருமணம் ஆயிட்டு. காந்திஜி மகனைத்தான் கட்டியிருக்கா”
இது தெரியாமல் போய் விட்டதே மேகநாதன் யோசித்தான்.
ஆம், அவன் கூற்று உண்மைதான். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரராகவும் திகழ்ந்த சி. ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி அவர்களின் மகள் லட்சுமி என்பவரை, அண்ணல் காந்தியடிகளின் இளைய மகனான தேவதாஸ் காந்தி என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.
அதற்கு பின்னால் ஒரு பெருங்கதை இருக்கிறது.
1928-ஆம் ஆண்டு தேவதாஸ் காந்தியும் லட்சுமியும் சந்தித்துக் கொண்டனர். அப்போது லட்சுமிக்கு 15 வயது தான். தேவதாஸ் காந்திக்கு 28 வயதாக இருந்தது. இருவரும் ஒருவரை யொருவர் விரும்பினர். இலை மறைவு காய் மறைவாகத்தான் இவர்கள் காதல் சென்று கொண்டிருந்தது.
காந்தியடிகள் விசயமாக ராஜாஜியை சந்திக்க வந்த இடத்தில் இருவருக்கும் காதல் வந்து விட்டது.
எப்படியாவதுதிருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
இதை எப்படியாவது பெரியவர்களிடம் சொல்ல வேண்டும்.
இரண்டு பேர் திருமணம் நடக்குமா? இரண்டு பேருக்கும் 13 வயது வித்தியாசம் இருக்கிறது. லெட்சுமியோ பக்குவம் அடையாத நிலையில் இருக்கும் பெண் ஆவார்.
ஆமாம் இதுபோல இந்தத் திருமணத்திற்குத் தொடக்கத்தில் சில சவால்கள் இருந்தன.
ராஜாஜி பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்; காந்தியடிகள் வைசிய (குஜராத்தி) சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த காலத்தில் இவ்வகைத் திருமணம் நடக்கவே நடக்காது. உடன்கட்டை ஏறும் வழக்கம் வட மாநிலத்தில் இருந்து கொண்டிருந்த காலமாகும். அதோடு மட்டுமல்லாமல் சாதி தாண்டவம் தலை விரித்து ஆடிய காலம். இந்த காலத்தில் சாதியை எதிர்த்து எப்படி திருமணம் நடக்கும்.
இதிலும் ராஜாஜியோ மிகவும் ஆச்சாரியமான குடும்பத்தினை சேர்ந்தவர்.
இது எப்படியோ இவர்களது பிடிவாத காதல் காந்தியடிகளுக்கும், ராஜாஜிக்கும் தெரிந்து விட்டது.
அவர்கள் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் காதல் ஜோடிகளின் பிடிவாத காதலுக்கு மறுப்பு சொல்ல இயலவில்லை. எனவே பலவாறாக இருவரும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

லட்சுமி இன்னும் இளம் பெண்ணாக இருந்ததால், இக்காதல் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவா அல்லது உண்மையான அன்பா என்பதை உறுதிப்படுத்த காந்தியும் ராஜாஜியும் விரும்பினர்.
இந்த காதல் மீது மகாத்மா காந்தி இருவருக்கும் ஒரு கடுமையான நிபந்தனை விதித்தார்.
இருவரையும் கூப்பிட்டார். இரண்டு பேரும் மேலும் 5 ஆண்டுகள் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கவோ அல்லது கடிதம் எழுதிக்கொள்ளவோ கூடாது.
இந்த 5 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகும் இருவரின் அன்பு மாறாமல் இருந்தால், திருமணத்திற்குச் சம்மதிப்பதாகக் கூறினார்.
இருவரும் இந்த நிபந்தனையைக் கண்டிப்புடன் பின்பற்ற ஆரம்பித்தனர்.
சுமார் 5 ஆண்டுகள் இருவரும் காத்திருந்தனர்.
5 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இருவரின் விருப்பம் மாறாமல் இருந்ததைக் கண்ட காந்தியடிகளும் ராஜாஜியும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர்.
1933-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி. புதுடெல்லியில் உள்ள லக்ஷ்மி நாராயணன் கோவில் என்ற பிர்லா மந்திர் அருகில் எளிய முறையில் வேத முறைப்படி திருமணம் நடைபெற்றது.
சாதி தடைகளைத் தாண்டி நடைபெற்ற இந்த திருமணம், அன்றைய காலகட்டத்தில் சீர்திருத்தத் திருமணமாகப் பெரிதும் பேசப்பட்டது. அவர்களுக்கு வாரிசுகளும் இருக்கிறார்கள்.
இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய தலைவர்களான மகாத்மா காந்தியையும் ராஜாஜியையும் ஒரே குடும்பமாக இணைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இத் திருமணம் அமைந்தது.
மூச்சு விடாமல் நண்பன் கூறி முடித்துவிட்டான்.

அப்படியென்றால் வீட்டில் இருக்கும் பெண் ராஜாஜியின் மகள் அல்ல. அப்படியென்றால் யாராக இருக்கும்.
மேகநாதன் வந்த வேலையை மறந்து விட்டு, மற்ற வேலையை செய்ய ஆரம்பித்தான்.
அந்த பெண்ணைப்பற்றி நிறைய தேட ஆரம்பித்து விட்டான்.
சாதி மறுப்பு திருமணம் இந்த வீட்டில் நடந்து இருக்கிறது. அப்படி இருக்கும் போது அந்த பெண் ராஜாஜியின் உறவினராகத்தான் இருப்பார்.
அந்த வீட்டில் நானும் தங்கி, அந்த பெண்ணை காதலித்து மணம் முடிப்பேன். ராஜாஜி அவர்களின் சம்மதத்துடன் இந்த வேலையை முடிப்பேன் என உறுதி பூண்டான்.
பாவம். இவன் வாழ்க்கையில் எடுத்த இந்த முடிவு எங்கே போய் முடிய போகிறதோ தெரியவில்லை.
( குலசேகரபட்டினம் கொலை வழக்கு தொடரும்)


