நெல்லை – எனக்கு மேலும் ஒரு விருது கிடைத்தது.
நெல்லை மக்கள் கூட்டமைப்பு சார்பில் 06 செப்டம்பர் 2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:30 முதல் 07:00 மணி வரை பாளையங்கோட்டை சரோஜ் நினைவகத்தில், தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நெல்லையின் முன்னேற்றத்திற்காகவும் சமூக மேம்பாட்டிற்காகவும் அமைதியாகவும் அக்கறையுடனும் உழைத்து வரும் நல்லுள்ளங்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு, ‘நெல்லை மக்கள் கூட்டமைப்பு’ தொடங்கப்பட்டுள்ளது.
இத்தருணத்தில், நெல்லை சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய தலைசிறந்த மனிதர்களைக் கௌரவிக்கும் விதமாக ‘Spirit of Nellai’ மற்றும் ‘Champion of Nellai’ விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார்கள். எனக்கு தாமிரபரணி பணி செய்தமைக்காக‘Champion of Nellai’விருது வழங்கப்பட்டது. என்னை நெல்லை முனைவர் உலகம்மாள், வி.எம். சத்திரம் டிரஸ்ட் முனைவர் சுரேஷ், சென்னைவாழ் நெல்லை மக்கள் நலச்சங்கத் தலைவர் வழக்கறிஞர் சைமன், எனது சிஷ்யன் காமராசு செல்வன் ஆகியோர் பரிந்துரை செய்திருந்தார்கள். மேலும் பலர் என்னை பரிந்துரை செய்திருந்ததாகக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள்.
மிகவும் வித்தியாசமாக இருந்தது. திடீர் ஏற்பாடு, திடீர் விருது என்று அங்கே சென்றால் மிகப்பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிந்தது. எனக்கு வான்முகில் தொண்டு நிறுவன இயக்குனரும் வழக்கறிஞருமான பிரிட்டோ அவர்கள் விருது வழங்கி கௌரவித்தார்கள். எழுத்தாளர் பழனி அய்யா அவர்கள் எனக்கு தான் எழுதிய 1000 பக்க நூலைப் பரிசாகத் தந்தார்கள். இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மனத்தைக் கவருவதாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த டாக்டர் டேனி, சகோதரிகள் அஷ்விதா, மகாலெட்சுமி உட்பட்ட நெல்லை மக்கள் கூட்டமைப்புக்கு மிக்க நன்றி. என்னோடு விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். விருது வழங்க வருகை தந்தவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி.
– முத்தாலங்குறிச்சி காமராசு


