தூத்துக்குடி செய்தியாளர் குமாரவேல் ஊடகப் பணியைப் பாராட்டி, அவருக்குச் ‘சவுந்திரபாண்டியனார் விருது’ வழங்கப்பட்டது
தூத்துக்குடியில் இலக்கியச் செல்வர் ம.பொ.சி. கலை இலக்கிய மன்றத்தின் சார்பில், சமூக நீதிப் போராளி பட்டிவீரன்பட்டி டபிள்யூ.பி.ஏ. சவுந்திரபாண்டியனாரின் 134-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுச் சிறப்பு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, இலக்கியச் செல்வர் ம.பொ.சி. கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
தூத்துக்குடி செய்தியாளர் குமாரவேல் அவர்களின் ஊடகப் பணியைப் பாராட்டி, அவருக்குச் ‘சவுந்திரபாண்டியனார் விருது’ வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தி வரும் புத்தக வாசிப்பு மன்றத் தலைவரும் எழுத்தாளருமான ஆ. மாரிமுத்து அவர்களுக்குச் ‘சவுந்திரபாண்டியனார் விருது’ வழங்கி வாழ்த்திப் பேசப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்தரங்கில், நெடுஞ்சாலைக் கவிஞர் செல்வராஜ் கலந்துகொண்டு விருது பெற்ற இருவரையும் வாழ்த்திப் பேசினார். அதனைத் தொடர்ந்து, விருது பெற்ற செய்தியாளர் குமாரவேல் மற்றும் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து ஆகியோர் தங்களின் ஏற்புரையை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் அரசு ஓய்வுபெற்ற அலுவலர் ஷெரீப் மற்றும் சமூக ஆர்வலர் ஜனார்த்தனன் டேவிட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக, இலக்கியச் செல்வர் ம.பொ.சி. கலை இலக்கிய மன்ற அமைப்பாளர் ரவி நன்றி கூறினார்.


