தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உதவி மையத்தினை மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் உதவி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெல்ஸ்டார் மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் மருத்துவமனை உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. விழாவில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் தலைமையேற்று மருத்துவ உதவி மையத்தினை துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சுகாதார திட்டம் துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் திட்ட விளக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துறை தலைவர்கள் மருத்துவர்கள், லேப் டெக்னீசியன் பொன்ராஜ், தர மேலாளர் கிருஷ்ண காந், செவிலியர்கள் கண்காணிப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ரிஷிகேஷ் வரவேற்புறையாற்றினார். முதன்மை மேலாளர் ஜெரேமியா ஜெபஸ்டின் திட்டம் செயல்படும் விதம் குறித்து விளக்க உரையாற்றி நன்றி கூறினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 2500க்கும் அதிகமான பொதுமக்கள் பல்வேறு மருத்துவ சேவைகளை பெறுவதற்கு மேற்கண்ட மருத்துவமனைக்கு வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதாக தாமதமில்லாமல் செல்லவும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறவும் இந்த மருத்துவ உதவி மையம் பேருதவியாக இருக்கும்.
இதன் மூலம் பொதுமக்கள் தங்கு தடையின்றி எந்தவித குழப்பமும், கால தாமதமும் இல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும் மேலும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், எழுத படிக்க தெரியாதவர்கள் போன்ற அனைவரையும் மருத்துவமனை உதவி மையப் பணியாளர்கள் நேரில் அழைத்துச் சென்று புறநோயாளி சீட்டு பெறுதல், மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெறுதல், ஏதேனும் பரிசோதனை செய்ய வேண்டிய இருப்பின் அங்கு அழைத்துச் செல்லுதல், மற்றும் மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்தல் போன்ற சேவைகளை செய்வார்கள்.


