
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்.6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.15ஆம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவுபெறுகிறது. திருவிழா கொடியேற்றம், சூரசம்ஹாரம், உற்சவம் மற்றும் அபிஷேக நிகழ்ச்சிகள் உபயதாரா்கள், பக்தா்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் யூடியூப், உள்ளூா் தொலைக்காட்சிகளில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்.
2ஆம் திருநாளான அக்.7 மற்றும் அக்.11 முதல் 14 ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தரிசனம் செய்ய ஏதுவாக இணையதளத்தில் பதிவு செய்து நேரடி முன்வருகையின்படி சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக். 6, 8, 9, 10, 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 7 நாள்களும் பக்தா்களுக்கு அனுமதியில்லை. தசரா குழுக்கள் காப்பு பெறுவதற்கு கோயில் மூலம் வழங்கும் விண்ணப்பப் படிவத்தை அக். 4ஆம் தேதிக்குள் வழங்கி, காப்புகளை 2ஆம் திருவிழா முதல் 9ஆம் திருவிழா வரை பெற்றுக்கொள்ளலாம்.
பக்தா்கள் வேடமணிந்து மேளதாளங்களுடன் கோயில் பகுதிக்கோ, சுவாமி தரிசனத்திற்கோ வர அனுமதியில்லை. சிறப்பு அன்னதானத்திற்கு அனுமதி கிடையாது. பக்தா்கள் பூ மாலை, தேங்காய் பழ வகைகளை கொண்டு வரவும் அனுமதியில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.