சாத்தான்குளம் அருகே தங்களது பட்டா நிலத்தில் மின்கம்பம் அமைத்திருப்பதாக கூறி இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாஸ்தாவிநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட வாலத்தூர் கிராமத்திற்கு புதிய மின் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தட்டார்மடத்திலிருந்து சாத்தான்குளம் செல்லும் வழியில் உள்ள வாலத்தூர் கிராமத்திற்கு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு மின் கம்பம் அதே ஊரைச் சேர்ந்த சித்திரை என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் நடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சித்திரை என்பவருடைய பேரன் சிவகுமார் இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்துள்ளார்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மின்கம்பத்தை தனது இடத்திலிருந்து மாற்றி அமைக்க வேண்டும் எனக் கூறி மின்கம்பத்தில் ஏறி சிவகுமார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் மின்வாரியத் துறை உதவி பொறியாளர் சுஜா மற்றும் தட்டார்மடம் போலீசார் சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்குமாறு கூறினர்.
சம்பந்தப்பட்ட இடத்தை நில அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று சிவகுமார் மின் கம்பத்தில் இருந்து கீழே இறங்கினார்.
மின் கம்பத்தின் உச்சியில் ஏறி நின்ற நிலையில் இளைஞரின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


