தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் ஆணைப்படி, தென்மண்டல துணை இயக்குநர் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு-மீட்புப்பணிகள் துறை அலுவலர் குமார் உத்தரவின்பேரில் தீயணைப்புபடையினர் மாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதன்படி, ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் குருசுகோவில் புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.
விழிப்புணர்வு முகாமிற்கு, தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருள்ஜெயராணி, நிலைய அலுவலர் (போக்குவரத்து) முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதில், தீயணைப்புபடை வீரர்கள் அரிகரபாலன், சங்கர நாராயணன், பழனி, சங்கர் மற்றும் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோன்ற விழிப்புணர்வு முகாம், ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட்டது.


