தமிழக அரசானது அரசு ஊழியர்களுக்கு 10சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கிட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த 10சதவீதம் போதாது என்று கோரி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வகையில், மின் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரி மின்வாரிய ஊழியர்கள் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய சங்க பிரதிநிதி காமாட்சி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற மின் வாரிய ஊழியர்கள் 10 சதவீத போனஸ் போதாது இந்த தொகையை அதிகரித்து தரக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திட்ட இணை செயலாளர் அப்பாதுரை, தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் 10சதவீத போனஸ் அறிவித்துள்ளது சரியானதல்ல. தற்போதுள்ள சூழலில், இந்த போனஸ் தொகையை அனைத்து ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அதிகரித்து வழங்கிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதில், சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், பொன்செல்வி, ராமச்சந்திரன், லட்சுமணன், தேவசகாயராஜ், சந்திரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்


