ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவில் நேற்று தேர்பவனி கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயதிருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருனண ஆராதனையும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி, காலை 5.10 மணி, காலை 5.50 மணி, காலை 7 மணிக்கும் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மிக்கேல் தூதர் முன் செல்ல ஆலயத் திருத்தேரில் மாதா கைகளில் குழந்தை இயேசுவை தாங்கியபடி காட்சியளித்தார்.
தொடர்ந்து புனித சந்தியாகப்பர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார். மாதாவும், சந்தியாகப்பரும் நான்கு ரத வீதிகளில் வீதியுலா வந்தனர். அப்பொழுது வழிநெடுகிலும் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உப்பு, மிளகு மற்றும் பூக்களை தூவியியும், பக்திபாடல்களை பாடியும் வானவெடிகளை வெடித்தும் வழிபாடு நடத்தினர்.
நூற்றுக்கணக்கானோர் முடிகாணிக்கை செலுத்தினர். .இதை தொடர்ந்து திருபயணிகளுக்காக பகல் 12 மணிக்கு சிறப்புத் திருபலியும், மாலை 6மணிக்கு ஆராதனையும் நடைபெற்றது. தேர்ப்பவனியில், மறைமாவட்ட பொருளாளர் பிரதீப், பங்குத் தந்தையர்கள் கப்புச்சின்சபை அமல உதயம், டி.எம்.எஸ்.எஸ்.எஸ். தூத்துக்குடி அமலன், ரஞ்சித் குமார் சர்டோசா, சூசைராஜ், ஜார்ஜ். சிராசியுஸ் மைக்கிள், உவரி கிங்ஸ்லின், வீரபாண்டியன்பட்டணம் பூமெல், இடிந்தகரை சைமன், செய்துங்கநல்லூர் ஜாக்சன், அகஸ்சீனியர் சபைவிஜி, விசுவாசம் மற்றும் மணப்பாடு, பெரியதாழை, உவரி, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, கூட்டபுளி, தூத்துக்குடி, அமலிபுரம், கூடுதாலை, கடலோர கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குருசுகோவில் ஆலய பங்குதந்தை பிளோவியன் பர்னாந்து மற்றும் அருட்சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர் உள்ளிட்டோர் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோணிராஜ், பிரான்சிஸ் சேவியர், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


