திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினத்தையொட்டி நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தன.
10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றன. விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூருக்கு பக்தர்கள் அதிகளவில் வாகனங்கள் வந்திருந்தனர். இதனால் பஸ் நிலையம், தெப்பக்குளம் பகுதி, ரத வீதிகளிலும், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன


