தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் கிராமத்தில் கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் இருசக்கர வாகனமும் திருடு போயிருந்தது. இது குறித்து சிவக்குமார் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதோடு மட்டுமல்லாது பஜாரில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வியாபாரிகள் சங்கத்தினர் ஆராய்ந்த போது, இரண்டு இரு சக்கர வாகனத்தையும் டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வெளியே வந்தவர்கள் திருடியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பேய்க்குளம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


