இதுவரை.
குவைத் செல்வதற்கு டாக்டர் சுதாகர் மூலமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கியவர்கள் குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கத்தினர். இந்த பயணத்தினை பற்றி எழுதி வருகிறேன். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து துவங்கி சென்னை விமான நிலையம் வந்து தற்போது குவைத் விமான நிலையத்தில் இறங்கியுள்ளோம். எங்களை தமிழ்நாடு குவைத் பொறியாளர் சங்க செயலாளர் அசோக் குமார் அய்யா தங்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். இரவு அங்கேயே தங்கியிருந்தோம். எங்களை அழைத்துச்செல்ல சாமுவேல் என்ற இளைஞர் வந்தார்.& முத்தாலங்குறிச்சி காமராசு.
இனி.
சாமுவேல், குவைத் வாழ் தமிழ்நாடு பொறியாளர் சங்கத்தின் உதவி பொருளாளர். இவர் தங்கபனை நிறுவனத்தில் கடந்த 14 வருடங்களாக சேல்ஸ் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள இலங்குளம். இவர் தங்கபனை நிறுவனத்தின் உரிமையாளர் பலவேச முத்து அய்யாவின் உறவினர். தனது ஆரம்ப படிப்பை பரப்பாடி பள்ளியில் படித்து விட்டு, பொறியியல் படிப்பை திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் படித்தார். அதன் பின் தனது 22 வது வயதில் குவைத் வந்து விட்டார். பலவேச முத்து அய்யாவின் தங்க பனை நிறுவனத்தில் பணியாற்ற துவங்கி விட்டார்.
இவர் அலுவல் காரணமாக இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரிலேயா, சுவிர்ச்சர் லாந்து உள்பட 10 மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
கடந்த முறை டாக்டர் சுதாகர் வந்திருந்த போது, சாமுவேல்தான் உடன் இருந்துள்ளார். தற்போதும் எங்களுக்கு சிரித்தப்படியே உதவிசெய்து வந்தார். தற்போது இவர் பாஹில் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகில் உள்ள செட்டிக்குளம் ஆகும். இவருக்கு 1 வயது பையன் ஒருவரும் இருக்கிறார்.
நாங்கள் கிளம்பி தயாராக இருக்கவும், அவர் வந்து எங்களை காலை உணவு சாப்பிட அழைத்துச் சென்றார். அதிகாலையில் தமிழகத்தில் இருந்து வந்திருந்த நாங்கள் அசைவ உணவு சாப்பிடக்கூடாது எனவே சைவ ஹோட்டலுக்கு கூட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று அவர் எங்களை அழைக்க வந்திருந்தார்.
அவரோடு வெளியே வந்தோம். லிப்ட்டில் இருந்து இறங்குவரை எல்லா இடத்திலும் ஏ.சி இருந்த காரணத்தினால் குளிர்ச்சியாகவே இருந்தது. பில்டிங்கை விட்டு வெளியே வந்தவுடனே எங்களை வெயில் சுட்டெரித்தது. அதன் பின் காரில் ஏறினோம். அங்கேயும் ஏ.சி. இருந்த காரணத்தினால் வெயில் கொடுமை தணிந்தது.
காரை கிளம்பினார் சாமுவேல். கிட்டத்தட்ட 15 நிமிடத்தில், ஹோட்டல் இருக்கும் இடத்தினை அடைந்தோம். லிப்ட் வழியாக இரண்டாம் மாடிக்கு சென்றோம்.
அந்த ஹோட்டல் பெயர் சரவண பவன். ஹோட்டல் பெயரை கேட்டவுடன் நமது தமிழகம்தான் நினைவுக்கு வருகிறது.
சரவண பவன் சென்னையில் உள்ள ஒரு இந்திய உணவகமாகும் . இந்த உணவு நிறுவனம் தென்னிந்திய உணவு வகைகளை வழங்குகிறது . இந்தியாவில் 33 இடங்களில் குறிப்பாக சென்னையில் 24 இடங்களிலும் இந்த உணவகம் உள்ளது. வெளிநாடுகளில் வட அமெரிக்கா , தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு , ஐரோப்பா போன்ற 28 நாடுகளில் 92 இடங்களில் செயல்படுகிறது .
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் புன்னை நகர் எனும் ஊரைச் சேர்ந்த பி. ராஜகோபால் என்பவரால் 1968 இல் திறக்கப்பட்டது . பி. ராஜகோபால் சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள கே.கே.நகரில் ஒரு சிறிய மளிகைக் கடையைத் திறந்தார் . சென்னை, கே. கே. நகர் பகுதியில் 1981 ஆம் ஆண்டில் டிசம்பர் 14 அன்று சரவண பவன் எனும் பெயரில் தொடங்கிய உணவகம்தான் இதன் முதல் உணவகமாகும்.
சரவண பவன் உணவகத்திற்கு சென்னையில் 24 கிளைகளும், காஞ்சிபுரம், புதுடெல்லி ஆகிய ஊர்களில் தலா இரு கிளைகளும், வேலூர் மற்றும் புன்னை நகர் ஆகிய ஊர்களில் ஒரு கிளையும் என மொத்தம் 31 கிளைகள் உள்ளன.
இந்த உணவகத்திற்கு சென்னையில் கே.கே. நகர், திநகர், அசோக் நகர், ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம், வடபழனி (இரு கிளைகள்), அண்ணாநகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தி திரையரங்கக் கட்டிடம், பீட்டர்ஸ் சாலை, பாண்டி பஜார், சென்ட்ரல் தொடருந்து நிலையம், எழும்பூர், கடற்கரை தொடருந்து நிலையம், மயிலாப்பூர், அசோக் பில்லர், ஸ்பென்சர் பிளாசா, அசெண்டாஸ் தரமணி, வெங்கட நாராயணா சாலை, அண்ணா சாலை, ஆம்பிட் அம்பத்தூர் எனும் பகுதிகளில் கிளை உணவகங்கள் உள்ளன.
இந்த உணவகத்திற்கு காஞ்சிபுரத்தில் இரு கிளைகளும், வேலூரில் ஒரு கிளையும், புதுடெல்லியில் ஜன்பத் மற்றும் கன்னாட் பிளேஸ் என்ற இரு பகுதிகளில் இரு கிளைகளும், திருச்செந்தூர் அருகிலுள்ள புன்னை நகரில் ஒரு கிளையும் உள்ளன.
சரவண பவன் ஐக்கிய அரபு நாடுகளில் 9 இடங்களிலும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 6 இடங்களிலும், ஐரோப்பிய நாடுகளில் 4 இடங்களிலும், கனடாவில் 5 இடங்களிலும், மலேசியாவில் 4 இடங்களிலும், சிங்கப்பூரில் 4 இடங்களிலும், ஓமனில் ஒரு இடத்திலும், கதாரில் ஒரு இடத்திலும், பக்ரைனில் ஒரு இடத்திலும், பிரான்சில் ஒரு இடத்திலும் என 36 வெளிநாட்டு விற்பனை உரிமை உணவகங்களையும் கொண்டுள்ளது.
1992 இல் சிங்கப்பூருக்கு விஜயம் செய்த ராஜகோபால், மெக்டொனால்ட்ஸ் போன்ற பன்னாட்டு துரித உணவு உணவகங்களின் செயல்பாட்டைக் கவனித்தார் .
1990களில் சரவண பவன் சென்னை முழுவதும் பல உணவகங்களைத் திறந்தது. 2000 ஆம் ஆண்டில், சரவண பவன் தனது முதல் கிளையை இந்தியாவிற்கு வெளியே , துபாயில் , அதிக எண்ணிக்கையிலான இந்திய வெளிநாட்டினரைக் கொண்ட நகரத்தைத் திறந்தது .
குவைத்தில் இந்த ஹோட்டல் திறக்க காரணமாக இருந்தவர் ஏ.என்.என். நடராஜன் அவர்கள் தான் . இவர்தான் குவைத் தமிழ்நாடு பொறியாளர் சங்கம் துவங்க காரணமாக இருந்தவர். இவரின் மனைவி ஆனந்தி நடராஜன் தான் குவைத்தில் உள்ள மூன்று ஹோட்டல்களை நிர்வாகித்து வருகிறார். குவைத்தில் பாஹீல், சால்மியா, சர்வியா அருகில் என மூன்று ஹோட்டல்கள் இயங்குகிறது. இதில் நாம் பாஹீல் ஹோட்டலுக்குத்தான் செல்கிறோம்.
இங்கு வேலை செய்பவர்கள் 85 சதவீதம் தமிழர்கள்தான். இவர்கள்தான் தென்னிந்திய உணவை சிறப்பாக தரமுடியும். மேலும் உபசரிப்பையும் தர இயலும் என்பதால் அவர்களை இங்கே பணியமர்த்தி சர்வீஸ் வழங்கி வருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் கப்பல் மூலமாக நமது நாட்டு உணவு பொருள்களும் , காய்கறிகளும் அங்கே கொண்டு செல்லப்படுகிறது. சென்னையில் எந்த சுவையில் சைவ சாப்பாடு தருகிறார்களோ. அதே தரத்திலும் சுவையிலும் குவைத்தில் உணவுதரத்துடன் தருகிறார்கள். அதை நாங்கள் சுவைத்து உணர்ந்தோம். நமது ஊரில் சாப்பிட்டது போலவே ஸ்பெஷல் தோசையும், மெது வடையும் ஆடர் செய்து சாப்பிட்டோம்.
இந்த சாப்பாடு குறித்து சுவையான சம்பவங்கள் ஒன்றை சங்கபொருளாளர் சுப்பிரமணியன் எங்களோடு பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக இங்குள்ள வாசிகள் மாமிச உணவு தான் அதிகமாக சாப்பிடுவார்கள். அவர்களுக்கு சைவ சாப்பாடு பிடிக்காது. ஆனாலும் இந்தஹோட்டலை கேள்வி பட்டு ஒரு அரபு காரர் சாப்பிட வந்துள்ளார். வந்தவர் சிக்கன் கேட்டு ஆடர் செய்துள்ளார். ஆனால் இங்குள்ள சப்ளையர்கள், இங்கு சைவ சாப்பாடு மட்டுமே கிடைக்கும். அதுவும் தமிழக உணவு மட்டுமே கிடைக்கும். இங்கு அசைவ சாப்பாடு கிடைக்காது என்று கூறியுள்ளார்கள்.
மெனு கார்டை திருப்பி திருப்பி பார்த்தார் அரபியர். அதன் பின் கோபமடைந்தார். இந்த நாட்டில் சிக்கன் சாப்பாடடு இல்லையென்றால் வியாபாரம் உனக்கு கிடையாது என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். ஆனால் இவர் வார்த்தை பொய்த்து விட்டது. இங்குள்ள சைவ சாப்பாட்டை அனைத்துநாட்டவர்களும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.
நாங்கள் சென்று இருக்கும் போது காலை டிபன் தர 10மணியை தாண்டி விட்டது. இவ்வூரில் 10மணிக்கு மேல் தான் காலை உணவு சாப்பிட வருகிறார்கள். இவ்விடத்தில் இந்தியர்கள் பலரை காண இயலுகிறது.
இந்த ஹோட்டல் சுவரில் உலகில் எங்கேயெல்லாம் சரவண பவன் ஹோட்டல் உள்ளது என வரைபடம் ஒன்றை வைத்துள்ளார்கள். இந்த வரைப்படத்தில் சரவண பவன் ஹோட்டல் எந்தெந்த நாட்டில் உள்ளது என்பதை பட்டியலிட்டு இருந்தார்கள். அதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
நியூஸ்லாந்து, ஆஸ்திரிலேயா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், -ஜப்பான், சவுத் கொரியா, இந்தியா, ஓமன், கத்தார், குவைத், சவுத் அமெரிக்கா, கே.எஸ்.ஏ, யூ.ஏ. ஈ. பகீரைன், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து, சுவீடன், பிரான்ஸ், பெல்ஜியம், ஐலாந்து, யூ,கே, யூ.எஸ்.ஏ., கனடா போன்ற இடங்களில் அதன் கிளைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அகன்ற இடத்தில் தமிழகத்தினை போலவே அமைக்கப்பட்டிருக்கும் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டோம். தமிழக சுவையுடன் காலை உணவை முடித்துக் கொண்டு திருப்பதியுடன் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தோம். அங்கே அரபிக்கடல் எங்களை பார்த்து சிநேகமமாக கை அசைத்தது.
நாங்கள் தங்கியிருக்கும் இடத்திலும் இந்த கடல் இருந்தது. நாங்கள் அப்படியே கடற்கரை வழியாகவே பயணம் செய்கிறோம் என்பது எங்களுக்கு புலப்பட்டது.
இந்த வேளையில் அரபிக்கடல் அலை இன்றி இருப்பதை பற்றி நான் மும்பையில் அறிந்திருக்கிறேன். மும்பையில் உள்ள பாந்திரா பகுதியில் சீராக் ஹோட்டல் அருகில் அலை இன்றி இந்த கடல் காட்சியளிக்கும். இங்கேயும் அரபி கடல் அமைதியாகவே இருக்கிறது.
எனவே எனது கூகுளை எடுத்து இந்த அரபிக்கடல் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க முயற்சித்தேன். அப்போது தான் இந்த இடம் ஒரு வளைகுடா என்பதை அறிய முடிந்தது. நமது பகுதியிலும் மன்னார் வளைகுடா உள்ளது. இந்த மன்னார் வளைகுடாவில் தான் தூத்துக்குடி துறைமுகம் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 2500 வருடத்துக்கு முன்னால் பெருமையாக பேசப்படும் கொற்கை துறை முகமும் இதன் அருகில் தான் அமைந்துள்ளது. இங்குள்ள கடலை வங்களா விரிகுடா என்று அழைக்கிறோம்.
மன்னார் வளைகுடாவை பொறுத்தவரை மீன்கள் உள்பட முத்து கிடைத்த இடம் என பெருமை பட்டுக்கொள்வோம். ஆகவே குவைத் நகரம் அமைந்துள்ள இந்த வளைகுடாவை பற்றி தேட ஆரம்பித்தேன்.
சரவணபவன் ஹோட்டல் கண்ணாடி வழியாக மீண்டும் இந்த வளைகுடாவை பார்த்தேன். எங்கும் கடலாய் இருந்தது. சிறுசிறு படகுகள் வந்து செல்ல அங்கே துண்டில் பாலமும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பாலம் வழியாக படகுகள் உள்ளே ஓய்வெடுத்துக்கொண்டு நின்றன.
சரி இந்த வளைகுடா பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.
இவ்விடத்தினை பாரசீக வளைகுடா அல்லது அரேபிய வளைகுடா என்றழைக்கிறார்கள். தென்மேற்கு ஆசியப் பகுதியில் இந்தியப் பெருங்கடலின் நீட்சியாக ஈரானுக்கும் அரேபியக் குடாநாட்டுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு வளைகுடா இதுவாகும். இது ஓமான் வளைகுடாவின் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் , சவுதி அரோபியாவுக்–கும் இடையே அமைந்துள்ளது.
பாரசீக வளைகுடாவின் இயற்கைச் சூழல், மிகவும் வளம் பொருந்தியது. சிறந்த மீன்பிடிப் பகுதிகள், விரிந்து பரந்த பவளப் பாறைகள், பெருமளவு முத்துச்சிப்பிகள் என்பவற்றைக் கொண்டு விளங்கும் இது, அளவுக்கதிகமான தொழில் மயமாக்கம் மற்றும் அண்மைக்காலத்தில் இப்பகுதியில் நிகழ்ந்த போர்களினால் ஏற்பட்ட எண்ணைக் கசிவுகளினாலும் பெரும் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஈரான் & ஈராக் போர், பாரசீக வளைகுடாப் போர் போன்ற போர்க் காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த வளைகுடா இருந்துள்ளது.
ஏறத்தாழ 233,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந் நீர்ப்பரப்பு, இதன் கிழக்குப் பகுதியில் ஹொர்முஸ் நீரிணை (ஷிtக்ஷீணீவீt ஷீயீ பிஷீக்ஷீனீuக்ஷ்) வழியாக ஓமான் வளைகுடாவுடன் இணைந்துள்ளது. இதன் மேற்குப் பகுதியில், டைகிரிஸ், இயூபிரட்டீஸ் ஆகிய ஆறுகளின் கழிமுகம் உள்ளது. முக்கியமாக ஈரானையும், சவூதி அரேபியாவையும் பிரிக்கும் இதன் நீளம் 989 கிலோமீட்டர். மிகக் குறுகிய பகுதியான ஹொர்மூஸ் நீரிணைப் பகுதியில் இதன் அகலம் 56 கிலோமீட்டர் ஆக உள்ளது. பொதுவாக இவ்வளைகுடா ஆழம் குறைந்தது.
வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கில் ஈரான் எல்லையாக உள்ளது. தென்கிழக்கு மற்றும் தெற்கில் ஓமானின் ஒரு பகுதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது. தென்மேற்கு மற்றும் மேற்கில் கத்தார் , பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளது. வடமேற்கில் குவைத் மற்றும் ஈராக் ஆகியவை எல்லைகளாக உள்ளது.
ஈரானிய கடற்கரை மலைப்பாங்கானது. பெரும்பாலும் பாறைகள் உள்ளன. மற்ற இடங்களில் ஒரு குறுகிய கடற்கரை சமவெளி கடற்கரைகள், கடல் அலைகளுக்கு இடையேயான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சிறிய முகத்துவாரங்கள் வளைகுடாவின் எல்லையாக உள்ளது . கடலோர சமவெளி ஈரானின், வடக்கே விரிவடைந்து, டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் மற்றும் கரூன் நதிகளின் பரந்த டெல்டா சமவெளியில் செல்கிறது. வளைகுடாவின் அரேபியக் கரையில் பாறைகள் அரிதானவை. கத்தார் தீபகற்பத்தின் அடிப்பகுதியைத் தவிர, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள தீவிர தென்கிழக்கில், அவை முசாண்டம் தீபகற்பத்தின் கண்கவர் கடற்கரையை உருவாக்குகின்றன. அரேபியக் கரையின் பெரும்பகுதி மணல் நிறைந்த கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது. பல சிறிய தீவுகள் சிறிய தடாகங்களைச் சூழ்ந்துள்ளன.
1908 இல் ஈரானில் எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கும் வரை இங்கு நடந்த தொழில்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது. மீன்பிடித்தல், முத்துக் கட்டுதல், துவாரங்கள் கட்டுதல் , பாய்மர துணி தயாரித்தல் , ஒட்டக வளர்ப்பு, நாணல் பாய்கள் தயாரித்தல், தெற்கில் உள்ள தீவுகளில் இருந்து சிவப்பு ஓச்சர் போன்ற பிற சிறிய பொருட்களின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. வளைகுடாவைச் சுற்றியுள்ள வறண்ட நிலங்கள் , மெசபடோமிய சமவெளியின் வளமான வண்டல் நிலங்களைத் தவிர, மீன்பிடித்தல், மேய்த்தல் போன்ற தொழில்களில் மக்கள் ஈடுபட்டனர். மீன்பிடித்தல் வணிகமயமாகிவிட்டது. 1930 களில் உலகச் சந்தைகளில் ஜப்பானிய பயிரிடப்பட்ட முத்துக்களின் வருகைக்குப் பிறகு பாரம்பரிய முத்து-, மீன்பிடித் தொழில் குறைந்துவிட்டது . குவைத் , கத்தார் மற்றும் பஹ்ரைனில் பெரிய மீன்பிடித் தொழில்கள் நிறுவப்பட்டன. மேலும் சில நாடுகள் மீன் ஏற்றுமதியாளர்களாக மாறியுள்ளன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பாரசீக வளைகுடாவும் அதைச் சுற்றியுள்ள நாடுகளும் உலகின் எண்ணெய் உற்பத்தியில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளன. கூடுதலாக, இப்பகுதி உலகின் மதிப்பிடப் பட்ட நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்புகளில் தோராயமாக மூன்றில் இரண்டு பங்கு மற்றும் உலகின் மதிப்பிடப்பட்ட நிரூபிக்கப்பட்ட இயற்கை எரிவாயு இருப்புகளில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. இதனால் இப்பகுதி உலகின் தொழில்மயமான நாடுகளுக்கு கணிசமான முக்கியத் துவத்தைப் பெற்றுள்ளது . நிலத்திலும் கடலிலும் புதிய இருப்புக்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
1980 களின் ஈரான் -ஈராக் போர் , 1990 களின் முற்பகுதியில் நடந்த பாரசீக வளைகுடா போர் மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈராக் போர் போன்றவை இங்கு நடந்த முக்கிய போராகும். இவை எண்ணெய் கிணற்றை முக்கியமாக கொண்டு நடத்தப்பட்ட போராகும். இங்க பெரிய அளவிலான எண்ணெய் உள்நாட்டில் சுத்திகரிக்கப் படுகிறது. பெரும்பாலானவை வடமேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பெட்ரோ கெமிக்கல் மற்றும் பிற பெட்ரோலியம் சார்ந்த தொழில்கள் மற்றும் நுகர்வோர் தொழில்கள் வளைகுடா பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றன.
பல நூற்றாண்டுகளாக பாரசீக வளைகுடாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ளூர் கைவினைப் பொருட்கள் மூலம் கணிசமான கடல் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. கார்க் தீவு (ஈரான்), குவைத், அல்-தம்மம் (சவூதி அரேபியா), பஹ்ரைன், போர்ட் ரஷித் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) மற்றும் பிற இடங்களில் உள்ள பெரிய கடல் முனையங்களில் இருந்து எண்ணெய் கொண்டு செல்லும் பெரிய டேங்கர்களின் இடைவிடாத போக்குவரத்தால் பாரகீக வளைகுடா மிகவும் பரபரப்பாகவே உள்ளது.
பாரசீக வளைகுடா பகுதி ஆரம்பகால உள்ளூர் வணிகர்களாலும், 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து போர்த்துகீசியம், பிரிட்டிஷ் மற்றும் டச்சு வணிகர்களாலும் நன்கு அறியப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் ஹைட்ரோகிராஃபிக், வானிலை மற்றும் கடல்சார் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியபோது பயனுள்ள குளியல் அளவீட்டு விளக்கப்படங்கள் மற்றும் படகோட்டம் வழிமுறைகள் தோன்றின.
டேனிஷ் மீன்பிடி பயணம் 1930 களில் முக்கியமான கடல் உயிரியல் ஆய்வுகளை நடத்தியது. மேலும் 1970 களில் ஜப்பானியர்களால் மேலும் மீன்வள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கடற்பரப்பின் கடலியல், புவியியல் மற்றும் வண்டலவியல் பற்றிய ஆய்வுகள் 1950கள் மற்றும் 60களில் கடற்படை ஹைட்ரோகிராபிக் கப்பல்களில் பணிபுரியும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் மற்றும் எண்ணெய் நிறுவன ஆராய்ச்சி விஞ்ஞானிகளால் செய்யப்பட்டன. பின்னர் இந்த பணி ஜெர்மன் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சி பயணங்களால் தொடர்ந்தது. மேலும் குவைத் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்டிபிக் ரிசர்ச் மூலம் வடக்கு வளைகுடாவில் சில ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. ஆழமான புவியியல் கட்டமைப்பின் விரிவான ஆய்வுகள் எண்ணெய் நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் இவை ரகசியமாகவே உள்ளன .
அப்பப்பா ஒரு கண்ணாடி வழியாக கடலை பார்த்துவிட்டு கூ-குளை தொட்டதற்கு இத்தனை தகவலா என எனக்கு நானே வியந்து கொண்டேன்.
இதற்குள் காலை சிற்றுண்டியை முடித்து விட்டு மிக முக்கிய அருங்காட்சியகம் ஒன்றை பார்வையிட தயராகிகொண்டிருந்தார் டாக்டர் சுதாகர். எங்கள் இருவரையும் சாமுவேல் அந்த அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பல அதிசயங்கள் எங்களுக்காக காத்து இருந்தது.
( குவைத் பயணம்தொடரும்)