ஈ. வெ. கி. சம்பத் எனப்படும் ஈரோடு வெங்கட நாயக்கர் கிருஷ்ணசாமி சம்பத் 5. மார்ச், 1926 – பிப்ரவரி 23, 1977 ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன் .சம்பத் ஈரோடு மகாசன உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியிலும் படித்தார்.
நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிடர் கழகத்திலும் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1949ல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொடங்கிய போது அவருடன் சென்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர். சம்பத் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார்.ஏனைய நால்வர் – அண்ணா, இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், என். வி. நடராசன்.1957 நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் .1961ல் திராவிட நாடு கொள்கை தொடர்பாக அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.. அதில் தனது நண்பர்களான கண்ணதாசன், சிவாஜி கணேசன், பழ. நெடுமாறன் ஆகியோர் அக்கட்சியில் மற்ற முக்கிய தலைவர்கள் ஆவார். 1962 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சி படுதோல்வியடைந்தது – போட்டியிட்ட ஒன்பது இடங்களிலும் தோற்றது.1964ல் சம்பத் தன் கட்சியை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்து விட்டார். பின்னர் 1969ல் காங்கிரசு பிளவுபட்ட போது காமராஜர் தலைமையில் உருவான நிறுவன காங்கிரசில் இணைந்து விட்டார். 1971 நாடாளுமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1971 அக்டோபர் 2 அன்று இந்திரா காங்கிரசில் இணைந்தார்.சம்பத் 15-9-1946ஆம் நாள் வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருபத்தூரில் சுலோச்சனாவை மணந்தார். அத்திருமணத்தில் பெரியார் ஈ. வெ. ரா ஆற்றிய உரை பெண்கள் அலங்காரப் பொம்மைகளா? என்னும் தலைப்பில் குடிஅரசு பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டது. சம்பத்தின் மறைவிற்குப் பின்னர் சுலோசனா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அதன் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தார் . இவர் மகன் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் முன்னாள் இந்திய மத்திய அரசு அமைச்சர் மற்றும் காங்கிரசின் மாநிலத் தலைவர்களுள் ஒருவர். இன்னொரு மகன் இனியன் சம்பத்தும் காங்கிரசின் உறுப்பினர்; முன்னாளில் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பவராக இருந்தார்.