ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 17 ந்தேதி முதல் 23 ஆம் தேதி வரை காசநோய் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தை அனுசரிக்கும் முகமாக தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி வல்லநாடு துளசி கல்லூரியில் நடந்தது. காசநோய் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் அன்புராஜ் முன்னிலை வகித்தார். துளசி கல்லூரி நர்சிங் ஆசிரியர் மு. அன்பு ராஜ் வரவேற்றார். டாக்டர் சுந்தரலிங்கம் பேசும் போது, இந்தியாவில் காசநோயினால் 5 நிமிடத்துக்கு 2 பேர் மரணிப்பதாகவும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசுமருத்துவ நிலையங்களை அணுகி சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்திட வேண்டும். காசநோய் என கண்டறிப்பட்டவர் முழு கால அளவிற்கான சிகிச்சையை இடைவிடாது எடுத்துக்கொள்ள வேண்டும். இடையில் சிகிச்சையை நிறுத்தினால் இன்னல்தரக்கூடிய வீரிய காசநோய் உருவாகி மரணத்தினை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தையும் பாதிக்கும் என கூறினார். முடிவில் மாணவியர்களுக்கு காசநோய் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டது.
துளசி கல்லூரி நர்சிங் மாணவி சுப்புலெட்சுமி நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தான சங்கர்வேல், செல்லப்பா, நர்சிங் ஆசிரியை இரா. எழில் அரசி, சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல்ரகீம் ஹீரா செய்திருந்தார்.