
பணியின்போது உயிரிழந்த 6 காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியுதவி!
தூத்துக்குடியில் பணியிலிருக்கும்போது உயிரிழந்த 6 காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் பிள்ளைமுத்து கடந்த 10.09.2020 அன்று மாரடைப்பாலும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் கடந்த 31.05.2020 அன்று மாரடைப்பாலும், கயத்தாறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி தங்கராஜ் கடந்த 23.09.2020 அன்று உடல் நிலை சரியில்லாமலும்,
திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கணபதி கடந்த 02.09.2020 அன்று உடல் நிலை சரியில்லாமலும், தட்டப்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் நாராயணசாமி கடந்த 31.12.2020 அன்று சிறுநீரக கோளாறு காரணமாகவும், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் முத்துலெட்சுமி கடந்த 30.12.2020 அன்று மகப்பேற்றின்போதும் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி உயிரிழந்த காவல்துறையினரது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான வரவோலையை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிள்ளைமுத்து மனைவி மற்றும் வாரிசு தாரரான ராமலெட்சுமி என்பவரிடமும், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமசந்திரன் மனைவி மற்றும் வாரிசு தாரரான சாரதாதேவி என்பவரிடமும்,
சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கராஜ் மனைவி மற்றும் வாரிசு தாரரான தங்கசெல்வி என்பவரிடமும், சிறப்பு உதவி ஆய்வாளர் கணபதி மனைவி மற்றும் வாரிசு தாரரான வள்ளியம்மாள் என்பவரிடமும், தலைமைக் காவலர் நாராயணசாமி மனைவி மற்றும் வாரிசு தாரரான பார்வதி என்பவரிடமும், பெண் காவலர் முத்துலெட்சுமி அவர்களின் கணவர் மற்றும் வாரிசு தாரரான ராமநாதன் என்பவரிடமும் வழங்கி அவர்களுக்குக் கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது காவல்துறை அச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் சரஸ்வதி, மற்றும் உதவியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.