உடன்குடி ஊராட்சி ஒன்றிய வரலாற்றில் 50 ஆண்டுகளை கடந்து சத்தமில்லாமல் மாபெரும் மக்கள் புரட்சி அரங்கேறி வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு டேவிட் ஹவர் என்பவரின் 1850ம் ஆண்டைய சர்வே குறிப்புகளை நான் டெல்லியில் தற்செயலாக படிக்க நேர்ந்தது.
அந்த குறிப்புகளில் உள்ள பல்வேறு குளங்கள் நீர் வழித்தடம் இல்லாமல் உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இருப்பதை அறிந்தேன்.
இந்த பகுதி குளங்கள் அழிக்கபட்டதால் தான் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் நிலத்தடி நீர் உவர்ப்பாகி நிலத்தடி நீர் இல்லாத கருமை பகுதியாக மாறி உள்ளது.
மேலும் மழை பொழிவு இல்லாததால் விவசாயம் அழிந்து உடன்குடி ஊராட்சி ஒன்றிய பகுதி மக்கள் தொழிலை தேடி இடப்பெயர்ச்சி செய்யும் சிக்கல் நேர்ந்தது .
இதற்கு தீர்வு காண நானும் பல்வேறு நண்பர்களும் கடந்த 2019ம் ஆண்டு அதற்கான முயற்சியில் இறங்கினோம்.
உடன்குடியின் மேற்கு பகுதியில் உள்ள சடைய நேரி குளத்தில் இருந்து பத்தாங்கரை பகுதியில் நீர் வரும் வழித்தடங்கள் இல்லாமல் இருப்பதனை சரி செய்ய முயற்சி மேற்கொண்டோம் .
ஆனால் அந்த முயற்சி கை கூடவில்லை. அதன் பின்னர் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முயற்சி செய்ய முடியாமல் போனது.
இந்த ஆண்டு என்னால் பெரிய பங்களிப்பு செய்ய முடியாத சூழ்நிலையில் காரைக்குடியை சேர்ந்த சமுக சேவகர் வள்ளி சரண் அதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்தார்.
முதலில் தண்டுபத்து அருகில் உள்ள நரி குளம் என்ற குளத்திற்கு கால்வாய் அமைக்க பட்டு குளம் தூர்வாரப்பட்டு தண்ணீர் கொண்டு நிரப்ப பட்டது.
பின்னர் அதன் அருகில் உள்ள தண்டுபத்து வடக்கு தெரு குளத்திற்கு தண்ணீர் கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு அந்த சிறிய குளம் நிரப்பபட்டது.
அதே வேளை மற்றொரு வழி மூலம் ஒரு கால்வாய் தோண்டப்பட்டு வெள்ளாளன் விளை அருகில் உள்ள மானாட்சி குளம் என்ற சுமார் 10 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்திற்கு 50 ஆண்டு காலம் கழித்து இன்று தண்ணீர் விடப்பட்டு குளத்தை நிறைக்கும் முயற்சி தொடங்கி உள்ளது.
உடன்குடி வட்டார பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் ,ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் , நன்கொடை கொடுத்த அன்பு நெஞ்சங்கள் , ஒருங்கிணைத்து தன்னை முழுமையாக அர்ப்பணித்த தன்னார்வலர்கள் என எண்ணற்ற நல்ல உள்ளங்கள் இந்த பணியை திறம்பட செய்து உள்ளனர்.
உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இந்த பகுதி மக்கள் அனைவரும் கடமை பட்டு உள்ளோம்.
நிற்க….
மானாட்சி குளம் வரை தண்ணீர் கொண்டு வந்து விட்டோம் இனி இது போதும் என யாரும் சோர்ந்து விட வேண்டாம்.
இனிமேல் தான் நம் பகுதிக்கான மிக பெரிய சவாலான பணி நமக்கு காத்து உள்ளது.
வெள்ளாளன் விளை மானாட்சி குளத்திற்கு கிழக்கே குண்டாங்கரை என்ற பகுதி உள்ளது அதே போல மானாட்சி குளத்திற்கு மேற்கேயும் ஒரு குண்டாங்கரை பகுதி உள்ளது.
தற்போது மானாட்சி குளத்திற்கு தண்ணீர் வரும் வழித்தடத்தில் இருந்து ஒரு கால்வாய் தோண்டி கிழக்கு நோக்கி கொண்டு வந்து வெள்ளாளன் விளை ஊருக்கு மேற்கே உள்ள குண்டாங்கரையை நிரப்பவேண்டும்.
மானாட்சி குளத்தின் தண்ணீரை மானாட்சி குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள குண்டாங்கரை இசக்கி அம்மன் கோவில் அருகில் இருந்து கால்வாய் தோண்டி வடக்கு பகுதி நோக்கி எடுத்து சென்றால் சுந்தரபுரம் ஊரின் வடக்கே தற்போது விவசாய நிலமாக காணப்படும் பகுதி சிறுகுளம் எனப்படும் நீர்பிடிப்பு பகுதி ஆகும். இந்த பகுதியை தண்ணிரால் நிறைத்து அதனை தொடந்து கிழக்கு பகுதியை நோக்கி தண்ணீர் கொண்டு சென்றால் அங்கு அரப்பா தோட்டம் என்ற நீர் பிடிப்பு பகுதி அதன் பின்னர் வட்டன் விளை அருகில் இடக்குளம் என்ற குளத்தையும் நிரப்பலாம்.
அதே போல சிறுகுளம் நிறைந்த பின்னர் பழைய காலத்தில் சோலை குடியிருப்பு வழியாக செம்மறி குளம் படுகைக்கு இந்த தண்ணீர் சென்று உள்ளது.
வட்டவிளை ஊரின் வடமேற்கு பகுதி வழியாக இந்த தண்ணீரை கிழக்கு நோக்கி கொண்டு சென்றால் மற்றொரு குளம் போன்ற சிறிய பள்ளம்(பெயர் தெரியவில்லை) உள்ளது .அதனை நிரப்பி கிழக்கு நோக்கி சென்றால் வெள்ளாளன் விளை சியோன் நகரில் உள்ள குண்டாங்கரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும்.
அதே போல அரப்பா தோட்டத்தின் வடக்கு பகுதியாக தண்ணீர் கொண்டு சென்று திருச்செந்தூர் – மெஞ்ஞானபுரம் சாலையை தாண்டி தண்ணீர் கொண்டு சென்றால் எள்ளு விளை அருகில் உள்ள நீர் பிடிப்பு குளம் மற்றும் தேரி குடியிருப்பு அருகில் மற்றொரு குளம் , காயமொழியில் உள்ள குளம் வரை இந்த தண்ணீர் செல்லும்.
பழைய காலத்தில் இந்த வழித்தடம் முழுமையுமே , குறிப்பாக பத்தாங்கரை பகுதி 500 ஏக்கர் முழுமையுமே வெள்ளத்தால் சூழப்பட்டு படகு பயணம் நடந்த பகுதி என்பது குறிப்பிடதக்கது.
அதே போல் திசையன் விளை ஆயன்குளம் அருகே காணப்படும் அதிசய கிணறு போல செம்மறி குளம் படுகை பகுதியில் ஒரு சில கிணறுகளில் தண்ணீர் விட்டால் தண்ணீர் உள் வாங்கும் .
மானாட்சி குளத்தின் அருகிலும் இப்படி ஒரு கிணறு இருந்ததாக பெரியவர்கள் சொல்ல கேள்விபட்டு உள்ளேன்.
இது போன்ற பழமையான கிணறுகளை கண்டறிந்து அதற்குள் தண்ணீர் விட்டால் நிலத்தடி நீர் பூமிக்குள் சேகரிக்கபட்டு மீண்டும் பூமிக்கு அடியில் உள்ள நீர் வழித்தடங்கள் தண்ணீரால் ரீசார்ஜ் செய்யப்படும்.
நமது பகுதியின் பூமிக்கு அடியில் உள்ள பாறைத்தட்டு சுட்டியங்கல் பாறை வகையை சேர்ந்தது இந்த வகை பாறை தட்டு நிலத்தடி நீரை ஈர்த்து தனக்குள் சேகரிக்கும் திறன் உடையது.
இந்த பாறைகளில் இப்போது நாம் குறிப்பிட்ட மெஞ்ஞானபுரம் பத்தாங்கரை தொடங்கி தண்டுபத்து , வெள்ளாளன் விளை , பரமன்குறிச்சி , காயாமொழி வரை எல்கைக்கு உட்பட்ட பகுதிகளை நாம் நன்நீரால் நிரப்பி பழைய நீர் வழித்தடங்களை நிரப்பும் பட்சத்தில் மணப்பாடு வரை தண்ணீர் நல்ல தண்ணீராக மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இந்த நீராதார பணிகள் அனைத்துமே மக்கள் தாங்களாக நிதி திரட்டி சிரமபட்டு செய்வதை விடுத்து அரசே இதை செய்தால் இந்த பகுதி இன்னும் செழிப்பாக மாறும்.
நமது ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஜல்சக்தி அபியான் போன்ற திட்டங்களில் ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் வளர்ச்சி திட்ட பணிகளை இது போன்ற திட்ட பணிகள் செய்வதற்கு அரசு ஒதுக்க வேண்டும்.
குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு நான் கடுமையாக முயற்சி செய்து உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு நிலத்தடி நீரை காக்க கொண்டு வந்த PMKSY திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் 1 கோடியே 37 லட்ச ரூபாய் முறைகேடாக பணிகள் நடந்து அதில் நடந்த ஊழல் காரணமாக அந்த திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எனது புகாருக்கு பின்னர் அரசு நிறுத்தி வைத்து உள்ளது.
இந்த நிதியை தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் மீண்டும் நமது பகுதியில் நடக்கும் இந்த மக்கள் புரட்சி திட்டங்களுக்கு மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தேவையற்ற திட்டங்களில் உடன்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடக்கும் திட்டங்களை நிறுத்திவிட்டு நிலத்தடி நீரை காக்க நம் உடன்குடி வட்டார மக்கள் ஊர் கூடி ஊரணி அமைக்க அரசே நிதி ஒதுக்கி வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
இதற்காக நம் வட்டார இளைஞர்கள் , பொதுமக்கள் தொடர் முயற்சி செய்ய வேண்டும் என்பதே என் தீரா அவா…..


