செய்துங்கநல்லூரில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இன்றைய தினம் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் மற்றும் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பயிற்சி டிஎஸ்பி சியாமளா தேவி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழாவை நடத்தி வைத்தார். இதில் கருங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் பயிற்சி டிஎஸ்பி சியாமளா தேவி பேசுகையில், பெண்கள் பாதுகாப்பிற்காக காவலன் எஸ் ஓ எஸ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து நீங்கள் அதனை பயன்படுத்த வேண்டும், நீங்கள் எங்கிருந்தாலும் எஸ் ஓ எஸ் செயலியை தொடும் போது பத்து நிமிடத்தில் காவல்துறை உங்களை தேடி வரும். இப்படி ஒரு பெண்களுக்கு பாதுகாப்பான இந்த அருமையான திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்னென்ன தேவையோ அனைத்தும் தமிழக அரசு செய்து கொண்டு இருக்கிறது. அதனை பெண்களாகிய நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி, செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர், குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள், மற்றும் கண்காணிப்பாளர்கள், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


