சிவாஜி கணேசன் 1 அக்டோபர் 1928 – 21 சூலை 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக்குரலோன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படுகின்றார். நீண்ட வசனங்களை எளிதில் உள்வாங்கிக் கொண்டு அதை உணர்ச்சிபூர்வமாக திரையில் பிரதிபலிக்கும் ஆற்றல் இவருக்கு இயல்பாகவே இருந்தது. நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர், நடிப்பு பல்கலைக்கழகம் என்றும் போற்றப்படுகிறார். சரித்திரம், புராணம் , குடும்பம், சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று அதில் திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன்.
சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.
இளமைப் பருவம்
சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4 ஆவது மகனாக விழுப்புரத்தில் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார். சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் விழுப்புரம். அங்குதான் 1928 இல் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் இரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் மேலும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் இரயிலுக்கு சின்னையா வெடி வைத்ததற்காக அவருக்கு ஆங்கிலேய அரசால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார்.
கணவர் சிறை சென்று விட்டதால் ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றினார். சிவாஜிக்கு 4 வயதாக இருக்கும் போது சின்னையா மன்றாயர் நன்னடத்தைக்காக, 7 வருட தண்டனை 4 ஆண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். பிறகு சிவாஜியின் குடும்பம் திருச்சியில் உள்ள சங்கிலியாண்டபுரம் என்ற இடத்திற்கு குடியேறியது.
மேடை நாடக வாழ்க்கை
சிறுவயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றபோது தானும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம், சிவாஜி கணேசன் மனதில் ஆழமாகப் பதிந்தது. நடிப்பின் மீது எற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தனது ஏழு வயதில் பெற்றோருக்கு தெரியாமல் திருச்சியில் முகாமிட்டு இருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா என்ற நாடகக்குழுவில் சேர்ந்தார். அந்த நாடகக் குழுவில் இருந்த சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் தான் சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.
ஏழு வயது சிறுவனாக சிவாஜி கணேசன் நடித்த முதல் மேடை நாடகம் ராமாயணம் அதில் அவர் போட்ட வேடம் சீதை. ஆரம்பத்தில் பெண் வேடங்களில் நடித்த இவருக்கு பிறகு பரதன், சூர்ப்பனகை, இந்திரஜித் என பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுவனாக நாடகங்களில் நடித்த போதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்ற்றிருந்தார்.
திராவிட கழக மாநாட்டில் (1946), பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
இல்லற வாழ்க்கை
பராசக்தியில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம் நடந்து விட்டது. தனது உறவுக்கார பெண்ணான கமலா என்பவரை 1952 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மணந்தார். பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் சீர்திருத்த முறைப்படி திருக்குறள் பாடப்பட்டு எளிமையாக நடந்தது. இவர்களது மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர் ஆவர்.
சிவாஜிகணேசன் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் கொண்டவர். எனவே தனது பெற்றோர், தம்பி வி .சி. சண்முகம் மற்றும் அண்ணன் வி .சி. தங்கவேலு ஆகியோரின் குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார். இவரது மகன் பிரபு புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். 1982 ஆம் ஆண்டு வெளிவந்த சங்கிலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மேலும் சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு 2011 ஆம் ஆண்டு கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியுதவி
கல்வி கூடங்கள் கட்டுவதற்கும், இயற்கை சீற்றங்களின் போதும் போர், கால சமயங்களிலும் பல நிதி உதவிகளை சிவாஜி கணேசன் செய்துள்ளார். 1959ல் மதிய உணவு திட்டத்திற்கு அன்றைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி , 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கி உள்ளார். 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் கொடுத்துள்ளார்.
1965ல் இந்தியா–பாகிஸ்தான் போரின் போது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் தனக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 சவரன் போர் நிதியாக கொடுத்தார். கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி, அதில் தனது செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தார் அது இப்போதும் நினைவு சின்னமாக திகழ்கின்றது.
1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் திருவள்ளுவருக்கு தானே முன்மாதிரியாக நின்று சிலை அமைத்து கொடுத்தார். மேலும் உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் நிதியாக அளித்தார். தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கினார்.


