
(ஆரம்ப காலத்தில் மேடை நாடகம் எழுதி இயக்குவதிலும், நடிப்பதிலும் ஆர்வம். தொடர்ந்து திருநெல்வேலி வானொலியில் கதையையும் , நாடகத்தினையும் எழுதி வந்தேன். தாமிரபரணியை பற்றி அறிந்த போது தான் முழுநேர வரலாற்று தகவலை திரட்டி எழுதும் எழுத்தாளராகி விட்டேன். ஆனாலும் கூட நாவல் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதுக்குள் எப்போதுமே இருந்து கொண்டே இருந்தது. தற்போது முத்துக்கிளி என்ற தொடரை எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த தொடர் நான்கு நாவலாக வெளிவர ஆயத்தமாகிகொண்டிருகிறது. ஆனாலும் வரலாறு முக்கியம் அரசே என்று சொல்வதுபோல நெல்லை டைம்ஸ் பொருப்பாசிரியர் தம்பான் என்னிடம் வரலாற்றை எழுத உற்சாகப்படுத்திககொண்டே இருப்பார். பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள், ஆச்சி சொன்ன ஆத்தோரககதைகள், தாமிரபரணியே எங்கள் தாமிரபரணியே போன்ற தொடர்கள் நான் நெல்லை டைம்ஸ் இல் எழுதியது தான். இந்த நிலையில் தான் நான் முதல் முதலாக வெளிநாட்டு பயணத்தினை மேற்கொண்டேன். முதல் முதலாக குவைத் சென்று வந்துள்ளேன். இந்த சமயத்தில் அவர்கள் நீங்கள் குவைத் சென்று வந்த பயணககட்டுரையை எழுதுங்களேன் என கேட்டுககொண்டார். ஏற்கனவே நான் நெல்லை டைம்ஸ் இல் எழுதிய ஆச்சி சொன்ன ஆத்தோரககதைகளை குவைத்தில் ஒரு நாள் கருத்தரங்கில் பேசினேன். ஆகவே நான் குவைத்தில் பயணம் செய்த மூன்று நாள் பற்றி தொடராக தமிழ்டைம்ஸ் இல் எழுதுவது தான் சாலச்சிறந்தது என்று நினைத்தேன். எழுதத் தொடங்கியும் விட்டேன். தொடர்ந்து ஆதரவு தரும் நெல்லை டைம்ஸ் வாசகர்களுக்கும், நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ மாலை ராஜா அவர்களுக்கும், பொறுப்பாசிரியர் தம்பான் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவிற்கும் மிக்க நன்றி – எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு) தொடர்ந்து குவைத் பயணத்தினை தொடருவோம்.
1. தள்ளிப்போன பயணம்
தாமிரபரணி கரையிலேயே பயணம் செய்து புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறோம். என்றாவது ஒரு நாள் வெளிநாட்டுக்கு போவோம் என நினைத்தது உண்டு. ஆனால் முடியுமா?
அதற்கு பாஸ்போர்ட், விசா வேண்டும் பிளேட் டிக்கெட் தங்கும் இடம் என பணம் தேவை. சாதாரணமான எழுத்தாளன் நமக்கு அவ்வளவு பணம் எங்கே கிடைக்கும். எனவே வெளிநாட்டு பயணத்தினையெல்லாம் ஒத்தி வைப்போம். நமக்கு தாமிரபரணி மட்டும் தான் நிரந்தரம். இதை மட்டுமே எழுதுவோம் என கிட்டத்திட்ட 35 வருடங்களாக நாட்களை கடத்தி விட்டோம்.
ஆனாலும் தாமிரபரணி தாய் என்னை ஒவ்வொரு இடத்திலும் என்னை முன்னிறுத்தியே வருகிறாள். குறிப்பாக ஆதிச்சநல்லூர் வழக்கு என்னை உலக அரங்கில் கொண்டு போய் நிறுத்தியது. இதற்கிடையில் மலைப்பயணங்கள், ஜமீன்தார்கள் தேடல்கள் என என் வாழ்வில் நூல்கள் பெருகி கொண்டே இருந்தது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலக களரி அடிமுறை கூட்டமைப்புடன் இணைந்து களரி கலையை மீட்டெடுக்க எனது பணி துவங்கியது. இதுவும் என்னுடைய எழுத்துக்களை பல நாடுகளுக்கு கொண்டு சென்றது.
இந்த சமயத்தில் தான் மனோண்மணியம் சுந்தரனார் பலகலைகழகத்தின் தொடர்பு கிடைத்தது. தமிழ்த்துறையிலும், வரலாற்று துறையிலும் கால் பதித்த நான் உயிர் தொழில் நுட்ப துறையில் அபூர்வ பேராசிரியர் ஒருவரை கண்டேன். அவர் டாக்டர் சுதாகர். அமெரிக்காவில் பணியாற்றிய அவர் நெல்லை பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றியதோடு, இலக்கிய பணிகளிலும் ஈடுபட்டார். எனது ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் நூலை படித்து என் மீது பாசம் கொண்ட அவர், கல்லூரி படிப்பை தொடாத நான் எழுதும் எழுத்தை கண்டு வியந்து போற்றினார். அதனால் எனக்கு மனதுக்குள் சந்தோசம் ஏற்பட்டது. அவரோடு என் பயணம் துவங்கியது. இதற்கிடையில் தொல்லியல் மீது அவருக்கு மிகுந்த பற்று, அவர் முயற்சியால் பல்கலைகழகத்தில் தொல்லியல் துறை உருவாகியது. துறைத் தலைவராக இவரே பொறுப்பேற்றார். இதனால் ஆதிச்சநல்லூர் வருகை தரும் போதெல்லாம் என்னை பார்ப்பார்.
ஒரு நாள் சொன்னார். பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களை நான் இத்தாலிக்கு அனுப்பி வைக்கிறேன். அங்கே போய் தாமிரபரணி, ஆதிச்சநல்லூர் பற்றி பேசி விட்டு வாருங்கள் என்றார்.
அவர் எதுசொன்னாலும் சரியாக இருக்கும் என நான் உடனே பாஸ்போர்ட் அப்ளை செய்து வாங்கி வைத்துக்கொண்டேன்.
அதன் பின் சிறிது காலம் என்னோடு அவர் வெளி நாட்டு பயணம் குறித்து பேச வில்லை. நானும் அலுவலக வேலையில் மறந்து விட்டேன்.
ஒரு நாள் என்னிடம் வந்தார். குவைத்தில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது.நமது தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க ஆண்டு விழா நடைபெறவுள்ளது. அங்கு எனது நண்பர் பொறியாளர் பலவேசமுத்து இருக்கிறார். அவரது ஏற்பாடில் நானும் நீங்களும் குவைத் சென்று விட்டு வரலாம் என்றார். டாக்டர் சுதாகர் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
மிகவும் சந்தோசமாக இருந்தது. தாமிரபரணி கரையில் நதியின் புகழை மட்டுமே பாடிக்கொண்டிருந்தவன், வெளிநாட்டுக்கு செல்லப்போகிறோம் என்பது எவ்வளவு பெரிய சந்தோசம். எனவே சந்தோசமாக இருந்தேன்.
இந்த நேரத்தில் குவைத்தை பற்றி நிறைய அறிய வேண்டும் என ஆசைப்பட்டேன். எனவே குவைத்தை பற்றி என்னென்ன தகவல்கள் உள்ளது என தேட ஆரம்பித்தேன்.
குவைத் நாட்டில் பேசப்படும் மொழி அரபு மொழியாகும். குவைத் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 4 மில்லியன்கள் ஆகும்.
18ம், 19ம் நூற்றாண்டுகளில், குவைத் செல்வம் கொழிக்கும் ஒரு வணிக நாடாக இருந்தது. பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டதை அடுத்து குவைத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. முதல் உலகப் போர்க் காலத்தில், உதுமானியப் பேரரசை குவைத் மன்னர் ஆதரித்ததை அடுத்து பிரித்தானியப் பேரரசு பொருளாதாரத் தடை விதித்தது. 19-20 இல் இடம்பெற்ற குவைத்- நஜித் போரை அடுத்து, சவூதி அரேபியா 1923 முதல் 1937 வரை பொருளாதாரத் தடை விதித்திருந்தது. 1990 இல், குவைத் மீது ஈராக் படையெடுத்து தன்னுடன் இணைத்து வைத்திருந்தது. அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீட்டை அடுத்து குவைத் விடுவிக்கப்பட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக குவைத்தை அசைப்போட்டுக்கொண்டே குவைத் வரலாற்றை தேட ஆரம் பித்தேன்.
1899 முதல் 1961ல் சுதந்திரம் அடைந்த வரை குவைத்தை ஆளும் அல்சபா வம்சத்திற்காக வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை பிரிட்டன் மேற்கொண்டது. 2ஆகஸ்ட் 1990அன்று குவைத் ஈராக்கால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
பல வாரங்கள் நடந்த வான்வழி குண்டு வீச்சைத் தொடர்ந்து, அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கூட்டணி 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 23அன்று தரையில் தாக்குதலை தொடங்கியதால் நான்கு நாட்களில் குவைத் விடுவிக்கப்பட்டது.
1990 -91 போது சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளை சரிசெய்ய குவைத் 5பில்லியனுக்கு மேற்பட்ட தொகையை செலவு செய்தது.
அல்சபா குடும்பம் 1991ல் ஆட்சிக்கு திரும்பிய பின்னர் மக்களாட்சி சட்டமன்றத்தை மீண்டும் நிறுவியது. சமீபத்திய ஆண்டுகளில் அது மேலும் உறுதியானதாகியது. மே 2009ல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் அரபு தேசிய சட்டமன்றத்தில் நான்கு பெண்கள் இடம்பெற்றனர்.
2010 & -11ல் அரபியா முழுவதும் நடந்த எழுச்சிகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், பிதூன் எனப்படும் அரேபிய பூர்வீகம் அற்றவர்கள், 2011ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குடியுரிமை, வேலைகள், மற்றும் குவைத் குடிமக்களுக்கு கிடைக்கும் மற்ற நன்மைகள் ஆகியவற்றைக் கோரி சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் ஆதரிக்கப்படும் இளைஞர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் ஆளும் குடும்பத்தில் உள்ள பிரதம மந்திரி போட்டியாளர்கள், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிரதம மந்திரி மற்றும் அவரது அமைச்சரவையை வெளியேற்றவும் 2011ல் மீண்டும் அணி திரண்டனர்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 2011ன் இறுதியில் பிரதமரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினர். தேர்தல் சட்டம் அமீரின் மாற்றங்கள் மூலம் ஒரு நபருக்கான வாக்குகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஒன்றாக குறைக்கப்பட்டதால், 2012அக்டோபர் முதல் டிசம்பர் வரை குவைத் முன்னெப்போதும் இல்லாத எதிர்ப்புக்களை கண்டது.
சன்னி இஸ்லாமியர்கள், பழங்குடியினர், சில தாராளவாதிகள், மற்றும் எண்ணற்ற இளைஞர்கள் குழுக்களின் கூட்டணி தலைமையிலான எதிர்க்கட்சி டிசம்பர் 2012சட்டமன்ற தேர்தலைப் புறக்கணித்தனர். இதன் விளைவாக ஷியா வேட்பாளர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணிக்கையிலான இடங்களை வென்றனர்.
2006ல் இருந்து, ஐந்து சந்தர்ப்பங்களில் தேசிய சட்டமன்றம் அமீரால் கலைக்கப்பட்டு (ஜூன் 2012ல் ஒரு முறை அரசியலமைப்பு நீதிமன்றம், சட்டமன்றத்தை ரத்து செய்தது) மற்றும் அமைச்சரவை 12முறை மாற்றியமைக்கப்பட்டது. வழக்கமாக இது சட்டமன்றம் மற்றும் அரசுக்கு இடையேயான அரசியல் தேக்கம் மற்றும் இடையூறுகளின் காரணமாக இருக்கும்.
குவைத்தில் இந்தியர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இங்கு கணிசனமா தமிழர்களும் வாழ்கிறார்ள். குவைத் நாட்டு தமிழர் அமைப்புகள் பல இங்கு செயல்பட்டு வருகிறது.
தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் குவைத்தில் வசிப்பவர்கள் ஆவர். இருபதாம் நூற்றாண்டின் நடுபகுதியில் இருந்தே பல்வேறு தொழில் வாய்ப்புகளின் காரணமாக தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
குவைத் நகரம் குவைத் நாட்டின் தலைநகரமாகும். இதன் மாநகர மக்கள்தொகை 2.38 மில்லியன் ஆகும். அரேபிய வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்நகரிலேயே குவைத்தின் பாராளுமன்றமான மஜ்லிஸ் அல்-உம்மாவும் பெரும்பாலான அரச அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்களும் அமைந்துள்ளன. மேலும் அமீரகங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மையமாகவும் இது விளங்குகின்றது.
குவைத் தினார் என்பது குவைத் நாட்டு நாணயமாகும். ஓரு தினார் என்பது 1000 பில்சுகளாகும். குவைத் தினார் உலகின் அதிக மதிப்புடைய நாணய அலகாக உள்ளது.
கல்ப் ரூபாய்க்கு மாற்றாக 1961 ல் தினார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு பவுண்டு ஸ்டெர்லிங்க்கு இணையான மதிப்பை கொண்டிருந்தது. ஒரு ரூபாய் 1 சில்லிங் 6 பென்சு க்கு இணையாக இருந்தபோது, தினார் மதிப்பு 13 ரூபாய்களாக இருந்தது.
ஈராக் 1990ல் குவைத்தை ஆக்ரமிப்பு செய்தபோது ஈராக்கி தினார் குவைத் தினாருக்கு மாற்றாக இருந்ததுடன், அதிக அளவிலான வங்கித் தாள்கள் ஆக்ரமிப்பு படைகளால் களவாடப்பட்டிருந்தன. ஆக்ரமிப்பு படை தோற்கடிக்கபட்டப் பின் குவைத் தினார் மறுபடியும் நாட்டின் நாணயமாக அறிவிக்கப்பட்டு புதிய வங்கித் தாள்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. திருடப்பட்ட பழைய வங்கித் தாள்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இது போன்ற பல தகவல்களை நான் குவைத் பற்றி அறிந்து கொண்டேன்.
குறிப்பிட்ட நாள் வந்தது எனக்கும் சுதாகர் அய்யாவுக்கும் விசா மற்றும் டிக்கெட் வந்தது. திருவனந்த புரத்தில் இருந்து சார்ஜா சென்று அங்கிருந்து குவைத் செல்ல டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. விசாவும் கிடைத்து விட்டது.
இந்தியர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பல்வேறு வகையான குவைத் விசாக்கள் உள்ளன.
சுற்றுலா விசா வை பற்றி முதலில் பார்க்கலாம். – இந்த விசாவை சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பெற முடியும், இதில் சுற்றிப் பார்ப்பது, விடுமுறை, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவை அடங்கும்.
விசிட் விசா என ஒரு விசா உண்டு. – இந்த விசா, நுழைந்த பிறகு 30 நாட்கள் வரை தங்குவதற்கு அனுமதிக்கிறது மற்றும் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த விசாவை செயல்படுத்த குவைத் தூதரகத்திற்கு குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். பார்வையாளருக்கு குவைத் நிறுவனம் அல்லது குடியிருப்பாளர் அல்லது குடியுரிமை வெளிநாட்டவர் (பார்வையாளரின் உறவினர்) நிதியுதவி அளிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள குவைத் தூதரகம் அல்லது குவைத் ஏர்வேஸ் அலுவலகம் மூலம் இந்தியர்கள் இந்த விசாவைப் பெறலாம். வெளிநாட்டவருடன் தொடர்புடைய பார்வையாளர்கள், விண்ணப்பப் படிவம், குடியுரிமை பெற்ற வெளிநாட்டவரிடமிருந்து பாதுகாப்புப் படிவம், பாஸ்போர்ட் நகல், ஸ்பான்சரின் பாஸ்போர்ட் மற்றும் சிவில் ஐடி ஆகியவற்றின் நகல்களுடன், ஸ்பான்சரின் சம்பளச் சான்றிதழ் மற்றும் உறவுச் சான்று ஆகியவற்றைச் சமர்ப்பித்து வருகை விசாவைப் பெறலாம்.
வேலை விசா என்பது மற்றொரு விசாவாகும். அனுமதி – குவைத்தில் வேலை செய்ய விரும்பும் இந்தியர்கள் பணி விசா/அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விசிட் விசாவைப் பயன்படுத்தி ஒருவர் குவைத்தில் வேலை செய்ய முடியாது. குவைத்தின் குடிவரவு விதிமுறைகளின் பிரிவு 17 மற்றும் 18ன் கீழ் நாட்டில் வேலை விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவைப் பெற, சமூக விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் விவகார அமைச்சகத்திடம் இருந்து பணி அனுமதி பெற, பணியாளரின் பாஸ்போர்ட்டின் நகலை முதலாளி சமர்ப்பிக்க வேண்டும். பணியாளரின் தனிப்பட்ட விவரங்களைச் சமர்ப்பித்து, குற்றவியல் விசாரணையின் பொது நிர்வாகத்திடம் இருந்து ஒரு NOCயை முதலாளி பெற வேண்டும். முதலாளியிடமிருந்து NOC மற்றும் பணி அனுமதியைப் பெற்ற பிறகு, பணியாளர்கள் நுழைவு விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் PCC (போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ்), நன்னடத்தை சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும். குவைத்தில் ஊழியர்கள் பாதுகாப்பு அனுமதி பெற தங்கள் கைரேகைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
மற்றொன்று போக்குவரத்து விசா. – இந்த விசா ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் குவைத் தூதரக அலுவலகம் அல்லது குவைத் துறைமுக அதிகாரசபையிலிருந்து பெறலாம். இந்த விசாவைப் பெற, விண்ணப்பதாரர்கள் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டு மற்றும் அடுத்த இலக்குக்கான விசாவை வைத்திருக்க வேண்டும்.
இந்தியர்களுக்கான குவைத் விசா கட்டணம் என்ன?
உங்கள் குவைத் விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்க, நீங்கள் 3 குவைத் தினார் (KD) கட்டணம் செலுத்த வேண்டும், இது 780,04 இந்திய ரூபாய் ((INR) ) ஆகும். குவைத் விசா கட்டணத்தைச் செலுத்த உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்த முடியும் .
சரி நமக்கு எந்த விசா கிடைத்திருக்கிறது என விசாவை பற்றி விசாரிக்கும்போது தான் எனக்கு தீடீரென்று அந்த பிரச்சனை ஏற்பட்டது.
ஆம். ஆகஸ்ட் 27 ,2022 அன்று எனக்கு தீடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.
விசா வந்து விட்டது, டிக்கெட் வந்து விட்டது. ஆனால் விமானத்தில் ஏறக்கூடிய தகுதி நமது உடலுக்கு இருக்கிறதா? செப்டம்பர் 2022 15 ந் தேதி குவைத் செல்ல தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்குள் சிகிச்சையை முடித்து விட்டு எப்படியாவது குவைத் கிளம்பி விடலாம் என நினைத்தேன்.
மனம் நிறைய ஆசைகளை வைத்திருந்தேன். ஆனால் வாய்ப்பு கிடைத்ததா?
(குவைத் நோக்கி)