தமிழகத்தில் தளபதி விஜய்யால் மட்டுமே வரலாற்று வெற்றி சாத்தியமானது என்றும், அவரே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளருமான ஸ்ரீநாத் தலைமை தாங்கிப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
த.வெ.க. செய்தி தொடர்பாளர் முகமது இப்ராகிம் ராவுத்தர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தின் போது மாற்றுக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் ஸ்ரீநாத் பேசியதாவது: கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைக் கைப்பற்றி மிகப்பெரிய வரலாற்று சாதனையைத் தலைவர் தளபதி படைத்துள்ளார். மக்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே அவர் அரசியலுக்கு வந்துள்ளார்.
“இன்றைக்கு 50 நாள், 100 நாள் தாண்டாது எனக் கூறுபவர்களுக்கு மத்தியில் உறுதியாகச் சொல்கிறேன், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான். அவராகப் பார்த்து விலகினால் மட்டுமே மற்றவர்களுக்குப் பதவி கிடைக்கும்.”
பொதுமக்கள் தற்போது சட்டமன்ற நிகழ்வுகளையே நேரலையில் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். நமது தலைவர் எங்குச் சென்றாலும், டெல்லி வரை அனைவரது கவனமும் அவர் மீதே உள்ளது; நாளை அந்த டெல்லியே அவராகக் கூட மாறலாம். தொடர்ந்து மக்கள் நலப் பணிகள் தொடரும் எனப் பேசிய அவர், கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


