தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வெள்ளநீரை எளிதாகக் கடலுக்குள் வெளியேற்றும் வகையில், பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் ரூ. 5,370.00 லட்சம் மதிப்பீட்டில் துரிதமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடை வழியாகத் தான் மழை வெள்ளநீர் கடலுக்கு வழிந்தோடி வருகிறது. கடந்த 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் பெய்த தொடர் கனமழையின் போது, மாநகர்ப் பகுதியில் இருந்து வந்த பெருமளவிலான மழை நீர் குறைந்த அகலம் கொண்ட பக்கிள் ஓடையில் செல்ல முடியாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வருங்காலங்களில் இது போன்ற வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், பக்கிள் ஓடையின் அகலத்தைக் கூடுதலாக 5 மீட்டர் வரை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இற்காக ரூ. 5,370.00 லட்சம் மதிப்பீட்டில் எஃப்.சி.ஐ குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை பணிகள் நடைபெறுகிறது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்னதாகவே போதிய முன்னேற்றத்தைக் காணும் வகையில், ஓடையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் தற்போது மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன.


