தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2026’ வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மாவட்ட அளவில் தொடங்கவுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, மண்டல, மற்றும் மாநில அளவில் நடத்தி வருகிறது. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியானது, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபட செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும்.
இதன்மூலம் திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பாராட்டி, அவர்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது, இந்த போட்டிகளில் முக்கிய நோக்கமாகும். பொதுமக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள முதலமைச்சர் விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மாவட்ட அளவில் தொடங்கப்படவுள்ளது. விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள ஆர்வமுள்ளோர் கடந்த 06.08.2026 முதல் 31.08.2026 வரை tncmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ள போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டு போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷு (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர்விளையாட்டுக்களான கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) போன்ற புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபாடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, கையுந்துப்பந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம், ஸ்பீடு ஸ்கேட்டிங், யோகாசனா, கடற்கரை கையுந்துப்பந்து, டென்னிஸ், பளுதூக்குதல், வாள்சண்டை, ஜுடோ, சாலை சைக்கிளிங், குத்துச்சண்டை, வுஷு, வில்வித்தை, மல்லல்கம்பம், ஜிம்னாஸ்டிக், கயாக்கிங்&கனாயிங், துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ் மற்றும் கோ-கோ (பள்ளிகளுக்கு மட்டும்), பால் பேட்மிண்டன் (கல்லூரிகளுக்கு மட்டும்) போட்டிகளும், பொதுப்பிரிவு ஆண்கள், பெண்களுக்கு தடகளம், கிரிக்கெட், கையுந்துப்பந்து, கால்பந்து, கேரம், சிலம்பம், யோகாசனா, பேட்மிண்டன், கபாடி, இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகளும்,
அரசு பணியாளர்கள் ஆண்கள், பெண்களுக்கு தடகளம், சதுரங்கம், கபாடி, கையுந்துப்பந்து, யோகாசனா, பேட்மிண்டன், கேரம் போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு PHYSICALLY CHALLENGED பிரிவில் தடகளம், பேட்மிண்டன், வீல்சேர் டேபிள் டென்னிஸ், பார்வைத் திறன் மாற்றுத்திறனாளி பிரிவில் தடகளம், சிறப்பு கையுந்துப்பந்து, மனவளர்ச்சி குன்றியோர் பிரிவில் தடகளம், எறிப்பந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளி பிரிவில் தடகளம், கபாடி Persons with Intellectual Disabilities (PwID) பிரிவில் தடகளம், எறிப்பந்து, நீச்சல், CEREBRAL PALSY (CP) பிரிவில் தடகளம், கால்பந்து போட்டிகளும் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் மட்டும் (01.01.2008 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்) இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு, பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவியர்களும் (01.07.2001 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்), பொதுப்பிரிவு (ஆண்கள், பெண்கள்) (15 வயது முதல் 35 வயது வரை) அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் (ஆண்கள், பெண்கள்) மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்கள் அனைவருக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
மாவட்ட (ம) மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.2,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000/-மும் வழங்கப்படும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.75,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.50,000/-மும் வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75,000/-மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50,000/-மும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25,000/-மும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
எனவே, மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க 06.08.2026 முதல் tncmtrophy.sdat.in என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 31.08.2026 ஆகும்.
இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும் விபரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ (அ) 7401703508 (ம) 0461 2321149 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


