காட்டுப் பன்றிகளைப் பிடிக்க விவசாயிகளின் நிலங்களிலேயே கூண்டுகள் வைப்பதற்கு 45 நாட்களுக்குள் கூண்டுகள் தயார் செய்யப்பட்டு, மாவட்டத்தின் 10 வட்டாரங்களுக்கும் வழங்கப்படும் என்று ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து ஆட்சியர் கூறியதாவது “விவசாயிகளின் நிலங்களிலேயே கூண்டுகள் வைத்துப் பன்றிகளைப் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிடிபடும் பன்றிகளை வனத்துறை மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 45 நாட்களுக்குள் கூண்டுகள் தயார் செய்யப்பட்டு, மாவட்டத்தின் 10 வட்டாரங்களுக்கும் வழங்கப்படும்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, முதற்கட்டமாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சிறு பாசனக் குளம் / கண்மாய்களில் உள்ள கருவேலமரங்களை அகற்றி, தண்ணீர்தேங்கும் திறனை உயர்த்த 1,000 ஏக்கருக்கு இந்த வாரத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது. மரத்தின் விட்டம் 5 இன்ச்க்கு மேல் இருந்தால் 1 டன் ரூ. 4,000/-ம், 5 இன்ச்க்கு கீழ் இருந்தால் 1 டன் ரூ. 1,000/-ம் அரசுக்குச் செலுத்த ஒப்பந்தம் கோரப்படும்.
வைப்பார் ஆற்றுப்படுகையில் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், கருவேலமரங்களைக் கொண்டு பொருட்கள் தயாரிக்கும் 2 தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள்:
1. பாசனக் கால்வாய் & குளங்கள் சீரமைப்பு: கடம்பா குளம், உப்பாற்று ஓடை, கடையனேரி கால்வாய் தூர்வாருதல்; கோரம்பள்ளம் குளம் மற்றும் இராசாங்குளம் கரைகளைச் சீரமைத்தல்.
2. 2025-26 நிதியாண்டிற்கான பயிர்க்காப்பீடு மற்றும் 2024 வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 33 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதல்.
3. நிலத்தடி நீர் பாதுகாப்பு: முக்காணி தடுப்பணைப் பகுதியில் தனியார் தொழிற்சாலைகள் அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுத்தல் மற்றும் அமிலக் கழிவுகள் வயல்களில் கலப்பதைக் கட்டுப்படுத்துதல்.
சாத்தான்குளத்தில் நீர்த்தேக்கம் அமைத்தல், மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்குதல், 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல்.
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 249 கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இணை இயக்குநர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் தங்கராஜன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்


