தூத்துக்குடியில் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட கதிர்வேலுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அமைப்பு செயலாளராக தூத்துக்குடியை சேர்ந்த கதிர்வேல் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஐ.என்.டி.யு.சி கவுன்சில் சார்பில் கதிர்வேலுக்கு பாராட்டு விழா, தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கவுன்சில் தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார்.
ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் சந்திரசேகர், வீரய்யா, இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால்ராஜ் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஐ.என்.டி.யு.சி. அகில இந்திய தலைவர் சஞ்சீவ் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் தொழிற்சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சீவ்குமார் சிங், தமிழக தலைவர் ஜெகநாதன், மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலாளர் க.பெருமாள்சாமி உள்ளிட்டோர் பேசினர். ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க அமைப்பு செயலாளர் பி.கதிர்வேல் ஏற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், ‘‘ஒரு தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தனித்திறமை வேண்டும். தொழிலாளர்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்கு துணிந்து செயல்பட வேண்டும். அந்த திறமை அமைப்பு செயலாளர் கதிர்வேலுக்கு உண்டு. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தொழிலாளர்களுக்காக ஒன்றாக செயல்படுவார். நமது மாவட்டத்தை சேர்ந்தவர் ஐ.என்.டி.யு.சி. அமைப்பு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது நமக்கு பெருமை’’ என்று கூறினார்.
விழாவில் ஐ.என்.டி.யு.சி. அகில இந்திய தலைவர் சஞ்சீவ் ரெட்டி பேசுகையில், ‘‘அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் நிரந்தரமாக பணியாற்றியவர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது பெரும்பாலும் ஒப்பந்தம், தினக்கூலி என்று மாறி வருகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க கோரி வருகிறோம்.
தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும். விவசாயம், வீட்டுவேலை, கட்டுமான அமைப்புசாரா தொழில் போன்றவற்றில் உள்ள தொழிலாளர்களையும் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தில் சேர்த்து ஒருங்கிணைக்க வேண்டும். வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு வீடு கிடைக்க வேண்டும்’’ என்று கூறினார்.
கூட்டத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் சமீபத்தில் நடந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கும், இமாச்சலபிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் மேகவெடிப்பால் இறந்தவர்களுக்கும், தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய ஜோ வில்லவராயர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, துப்பாக்கி சூடு நடத்தியவர்கள், அதற்கான உத்தரவு பிறப்பித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் ஐ.என்.டி.யு.சி பொருளாளர் பிரபாகரன், துறைமுக ஐ.என்.டி.யு.சி. ஆலோசகர் ரொமால்டு, பா.ஜனதா ஓ.பி.சி அணி மாநில துணை செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் முத்துக்குட்டி, ஐ.என்.டி.யு.சி. துணை தலைவர் ஆவுடையப்பன், பொது செயலாளர் ராஜசேகர், நெல்லை மாவட்ட தலைவர் உமாபதிசிவன், நிர்வாகிகள் பழனிச்சாமி, தேசிய துறைமுக தொழிலாளர் ஐ.என்.டி.யு.சி. மைக்கேல் ராயன், கருப்பசாமி, மணிவண்ணன், ஸ்டீபன், முருகேசன், குட்டிராஜ், சங்கர், ரவிகண்ணன், வேல்சாமி, அந்தோணிசாமி, சண்முகையா, ஞானசேகர், சிவராஜ், மாடசாமி, குட்வின், தொழிலதிபர்கள் பொன்குமரன், தமிழரசு மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நேஷனல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன் செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.


