மும்பையில் இருந்து வெளிவரும் ஒரே ஒரு வார இதழான வணக்கம் மும்பையில், நான் எழுதி வரும் நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2 என்ற தொடரில் 276 பகுதியாக “நான் சந்தித்த அபூர்வ மனிதரும் என்னுடைய குவைத் பயணமும்” என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது. வெளியிட்ட வணக்கம் மும்பை ஆசிரியர் ஜெய ஆசிர் அவர்களுக்கு நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் -2
முத்தாலங்குறிச்சி காமராசு
276. நான் சந்தித்த அபூர்வ மனிதரும், என்னுடைய குவைத் பயணமும்.
பெரும்பாலுமே ஒருவர் கல்வியில் மிகப்பெரிய தகுதியை அடைந்து விட்டால், கீழே உள்ளவர்களை மதிக்கமாட்டார்கள். அமெரிக்கா போன்ற வெளிநாட்டு பல்கலைகழகங்களில் வேலை பார்த்தால், உள் நாட்டு மக்களை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் எல்லோரும் அப்படியல்ல என்பதற்கு உதாரணமாக விளங்குபவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் துறை தலைவர் டாக்டர் சுதாகர். இவர் உடன் பயணிப்பவர்கள், பணிபுரிபவர்கள், மாணவ மாணவிகளை மதிப்பதில் ஈடு இணையற்றவர்.
இவரை நான் ஆரம்ப காலத்தில் கண்ட போது வியந்து போனேன். அமெரிக்காவில் பல இடங்களில் பணியாற்றியவர் தற்போது இங்கே உயிரி தொழில் நுட்பவியல் துறை தலைவராக பணியாற்றுகிறார் என அறிந்தேன். நெல்லையில் என்னையும் , எழுத்தாளர் சிற்பி பாமா அய்யா வின் சிறப்புகளை கண்டறிந்து, எங்களை பல மேடைகளில் ஏற்றி கௌரவித்தவர். எனது நூலான ஆதிச்சநல்லூர் ஆய்வுகளை படித்து விட்டு, என் மீது மிகுந்த பற்று கொண்டு, என்னை சரியான நேரத்தில் சரியான இடத்தில் பயன்படுத்தி எனக்கும் நல்ல பெயரை பெற்றுத்தந்தவர். நான் ஆதிச்சநல்லூர் ,சிவகளை,கொற்கை , ஆத்தூர் போன்ற இடங்களில் தொல்லியல் துறை மூலமாக நடைபெறும் அகழாய்வு பற்றி மதுரை உயர்நீதி மன்றத்தில் நின்று போராடிய ஒவ்வொரு ஆய்வுகள் பற்றி வெளிக்கொண்டு வந்தேன். அந்த சமயத்தில் இவர் தனது துறை மூலமாக தொல்லியல் அகழாய்வுகள் குறித்து கருத்துக்களை வெளிக்கொண்டு வர முயற்சி செய்தவர். பல்கலைகழகத்தில் ஆத்தூர் அகழாய்வு, தொல்லியல் துறை துவக்க விழாவில் என்னையும் அழைத்து கௌரவித்தார்.
இதற்கிடையில் தொல்லியல் துறை தலைவராக இவர் பணியாற்றி வரும் போது, மாணவ மாணவிகள் செய்யும் களப்பணியில் என்னையும் பயன்படுத்தி எனக்கு பெருமை சேர்ந்தார். எப்படியாவது என்னை வெளிநாட்டிற்குக் கூட்டிச்சென்று தமிழர்கள் மத்தியில் பிரபல படுத்த வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் எண்ணம். அதன் படி இத்தாலிக்கு என்னை கூட்டிச்செல்ல முயற்சித்த போது கொரோனா என்ற கொடும் நோய் வந்து விட்டது . இதனால் அந்த பயணம் தடைப்பட்டது. கடந்த வருடம் என்னை குவைத் நகருக்கு கூட்டிச்சென்று தமிழர்கள் மத்தியில் உரையாற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். நிகழ்ச்சி அழைப்பிதழ், விசா, பிளேன் டிக்கெட் தயாரானது. ஆனால் எதிர்பாராத விதமாக எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் அந்த பயணத்தில் நான் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் அவரது சொந்த ஊரான ஆத்தூர் ஆற்றுக்குள் கிடந்த பழங்கால பொருள்கள் ஆய்வில் இவரும், லக்னோ , பழைய பீர்பால் ஆய்வு மையம் ஆய்வாளர் மொர்த்தகாய் எழுதும் ஆங்கில கட்டுரையில் நானும் அவர்களுடன் கட்டுரையாளராக பயணிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். இது என்னை போன்ற கிராமத்து எழுத்தாளர்களுக்கு அபூர்வமாக கிடைத்த வாய்ப்பு.
இந்த சமயத்தில் 2024 மே மாதம் 10,11, தேதிகளில் குவைத் மாநகரில் என்னை அங்குள்ள தமிழ்நாடு பொறியாளர் சங்க 25 வது ஆண்டு விழாவில் ஆதிச்சநல்லூர் , தாமிரபரணி நாகரீகம் பற்றியும் மறுநாள் பெண்கள் கூடுகையில் ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகளை பேச வைத்து அழகு பார்த்தார்கள். இந்த முறை என்னை குவைத் அழைத்து வரவேண்டும் என்பதற்காகவே என்னோடு பயணம் செய்தார். அவருக்கும் எகிப்து தமிழர் நாகரீகம் ஒற்றுமை குறித்து பேச முடிவு செய்தார்.
முதன் முதலில் வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் என்னை வீட்டில் இருந்து அழைத்து சென்று, தூத்துக்குடி விமானநிலைத்தில் இருந்து சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இறக்கி, அதன் பின் பன்னாட்டு விமான நிலையம் அழைத்துச்சென்று, உணவு வாங்கி தந்து, கஸ்டம்ஸ் உள்பட அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் கடந்து என்னை குவைத் அழைத்துச்சென்றார்.
இதில் என்னுடைய நூல்களை சுமந்து சென்று குவைத் மக்களிடம் அறிமுகமும் செய்து வைத்தார். பல இடங்களில் இதய நோயாளியான என்னை கஷ்டப்படுத்தக்கூடாது என எனது லக்கேஜையும் அவரே சுமந்து சென்றார். நல்ல தோழனாக, சில இடங்களில் அவ்விடம் பற்றி என்னிடம் அறிமுகம் செய்யும் போது நல்ல ஆசானாக, சில இடங்களில் நான் செய்யும் சில தவறுகளை சுட்டிக்காட்டும் தகப்பனாக, சரியான நேரத்தில் உணவு மாத்திரை சாப்பிட வேண்டும் என அறிவுருத்தும் தாயாக ஐந்து நாள்களாக என்னோடு இருந்தார். இந்த நாள்கள் என் வாழ்வில் பொற்காலம். அவரது நெருக்கமான நண்பர்களை அறிமுகப்படுத்தி அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து வாய்ப்புகளையும் எனக்கும் வாங்கி கொடுத்தார்.
குறிப்பாக அவரது கல்லூரி தோழர் பலவேச முத்து அய்யா அவர்கள் மூலமாக அரபியர் ஒருவர் வீட்டில் நடத்திய விருந்து, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹோட்டலில் அரபி உணவு உண்டது. உலக தரம் வாய்ந்த காப்பி சாப்பிட்டது என எதை சொல்வது , எதை விடுவது என்றே தெரியவில்லை. ஆனாலும் ஒரிரு சம்பவங்களை இவ்விடத்தில் கூறலாம் என நினைக்கிறேன்.
இந்த குவைத் பயணத்தில் எங்களை வரவேற்க பூச்செண்டுடன் வந்த சங்க செயலாளர் அசோக் அய்யா, சங்க உறுப்பினர் பாலசுப்பிரமணியன் அவர்களும் நன்றி. அதன் பின் எங்களை நாங்கள் தங்கும் கட்டிடத்திற்க அழைத்துச்சென்றார். மறுநாள் காலை எங்களை சரவணா பவன் ஹோட்டலுக்கு காலை டிபனை சாப்பிட அழைத்துச்சென்ற சாமுவேல் தம்பி அவர்களுக்கும் தொடர்ந்து எங்களை அரசு பெட்ரோலிய அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்று விட்டு, அதன் பின் பலவேசமுத்து அய்யா கம்பேனிக்கு அழைத்து வந்தார்கள். அங்கு அவர் எங்களை சந்தோசமாக வரவேற்றார் அய்யா. அதன் பின் மதியம் பொருளாளர் சுப்பிரமணியம் மற்றும் சாமுவேல் ஆகியோருடன் உயர்தரமான அரபு ஹோட்டல் அல்கானியில் சாப்பிட்டோம். எங்குமே குடிசை வீடுகளை காண இயலவில்லை. இரவு நாங்கள் தங்கியிருந்த குடியிருப்பு அருகே உள்ள அழகான தென்னிந்திய உணவு விடுதியில் இட்லி வாங்கி சாப்பிட்டோம்.
மறுநாள் நிகழ்ச்சி நடந்த இடத்தில் காலை உணவு சாப்பிட்டோம். தொடர்ந்து எங்கள் நிகழ்ச்சியை முடித்தோம். தொடர்ந்த நமது தமிழ் குழந்தைகள் நடத்திய பிரமாண்டமான நடன போட்டி, மாறுவேட போட்டி, திருக்குறள் ஒப்பிவிப்பு உள்பட கலைப்போட்டிகளை நடத்தினர். மிக பிரமாண்ட தமிழர்கள் கலை நிகழ்ச்சியை குவைத்தில் கண்டு மகிழ்ந்தோம். தமிழர்கள் பண்பாடு, ஆதிச்சநல்லூர் நாகரீகம், தாமிரபரணி வரலாறு, எகிப்துக்கும் தமிழர்களுக்கான தொடர்ப்பு என மக்கள் ரசித்து கேட்டது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
அன்று மதியம் பலவேசமுத்து அய்யாவின் நண்பர் தொழதிபர் கிருஷ்ண குமார் அவர்களுடன் மதியம் மகபூலா எனும் இடத்தில் யெஸ் பேலஸ் என்னும் ஹோட்டலில் தரம் வாய்ந்த ஈரானியன் சாப்பாடு சாப்பிட்டோம். சுதாகர் சாரின் மாணவனும் எங்களோடு வந்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் உலக தரம் வாய்ந்த ஸ்டார் பக்ஸ் காபி ஒன்றை காரில் இருந்த படியே வாங்கி தந்தார் கிருஷ்ண குமார் அய்யா.
அன்று இரவு பலவேசமுத்து அய்யாவின் தொழில் பட்டனர் அரபு ஒருவர் வீட்டில் தீவானியா மாளிகையில் விருந்து நடந்தது. இந்த விருந்தும் நமக்கு மிகச்சிறப்பாக இருந்தது.
அதன் பின் மூன்றாம் நாள் எங்களை காலையில் அழைத்துச்செல்ல பொருளாளர் சுப்பிரமணியன், தனது மகன் துரையுடன் வந்திருந்தார். காலையில் சரவண பவனில் காலை உணவு சாப்பிட்டோம். அதன் பின் தொடர்ந்து எங்களை குவைத் அருங்காட்சியம், கடலுக்குள் நீளமான பாலம், அரண்மனை, பாராளுமன்றம், பாலைவனம் போன்றவற்றை காட்டுவதற்காக சங்க உறுப்பினர் காசி அவர்களும் சரவணன் அவர்களும் அழைத்துச்சென்றார்கள். அதன் பின் இரவு மகளிர் மட்டும் கூடுகை நடந்தது, அதில் ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகளை பேசி விட்டு தொடர்ந்து நாங்கள் தங்கும் இடத்துக்கு வந்தோம். தொடர்ந்து ஊருக்கு கிளம்ப வேண்டும். எங்களை பலவேச முத்து அய்யா, செயலாளர் அசோக் அய்யா, பொருளாளர் சுப்பிரமணியன் , சரவணன் ஆகியோர் வந்து வழியனுப்பி வைத்தார்கள். பரிசு பொருள்களை தந்தனர். எங்களை சந்தோசத்துடன் வழியனுப்பிவிட்டு அவர்கள் கிளம்பினர். எங்களை சாமுவேல் தம்பியும், அவரது நண்பரும் குவைத் விமான நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். அதன் பின் எனது லக்கேஜ்யையும் சேர்த்துக்கொண்டு என்னை நல்லபடியாக தூத்துக்குடி வந்து சேர்த்தார் டாக்டர் சுதாகர் அய்யா.
இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள் . இதைப்பற்றி தொடர்ந்து நான் ஒரு நூலாக எழுத திட்டமிட்டுள்ளேன். விரைவில் அந்த நூல் வெளிவரும். அதில் ஆங்காங்கே நான் சந்தித்த அனைத்து விசயங்களையும் எழுத உள்ளேன். இதற்காக குவைத் பற்றி படித்துக்கொண்டும் இருக்கிறோம். ஆனால் செல்லும் இடங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கட்டுரை எழுதி முகநூலில் வெளியிட்டு கொண்டே இருந்தார் டாக்டர் சுதாகர். அவரின் உழைப்பை என்ன வென்று சொல்வது.
எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்வது முறை என்றாலும் என்னை பொறுத்தவரை குவைத் பயணத்தில் எல்லா புகழுக்கும் காரணம் டாக்டர் சுதாகர் அவர்களே. அவருக்கு நான் எப்படி கைமாறு செய்யப்போகிறோனோ தெரியவில்லை.
ஆனாலும் எல்லா புகழும் சுதாகர் அவர்களுக்கே. குவைத்தில் மூன்று நாள் என்ற தலைப்பில் நான் எழுதும் நூலில், நான் சந்தித்த ஒவ்வொரு நண்பரையும் நிறைய பேசுவோம்.
(நதி வற்றாமல் ஓடும்)