கர்நாடக மாநிலத்தில் தேசிய பாரா தடகள போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்று திரும்பிய தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
கர்நாடக மாநிலம் கன்றிவாரா ஸ்டேடியத்தில் வைத்து கடந்த மூன்று தினங்களாக 13 வது தேசிய மாற்றுத்திறனாளிகள் பாரா தடகள போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் சார்பில் 42 வீரர்கள் பங்கேற்ற நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் ஏழு வீரர்கள் இந்த தேசிய அளவிலான பாரா தடகள போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 1 தங்கம் 4 வெண்கல பதக்கங்களை வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். T-38 பிரிவில் முகமது நசீர் 100 மீட்டர் ஓட்டம் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இதேபோன்று, F-55 பொன் மோனிஷா வட்ட எறிதல் மூன்றாம் இடம் மற்றும் ஈட்டி எறிதல் இரண்டாம் இடம்,T-40 பிரிவில் பேபி ஷாலினி ஈட்டி எரிதலில் மூன்றாம் இடம்,T-20 பிரிவில் ஜாய் ஜெரிக்கா குண்டு எறிதலில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
தேசிய பாரா தடகள போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து ரயில் மூலம் தூத்துக்குடி வந்த விளையாட்டு வீரர்களை தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் டாக்டர் முகமது நசீர் தலைமையில் செயலாளர் ஸ்டீபன், துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் நீல ராஜன், துணைத் தலைவர் கான்ஸ்டன்ட், துணைத் தலைவர் கிறிஸ்டோபர், ரிகானா, பர்வீன், நாக ஈஸ்வரி, அஜீஸ் ஆகியோர் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.


