தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்து வீணாகப் பல ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்குச் செல்கிறது
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்ததால், அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டுப் பெய்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், அணைகளிலிருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
பாபநாசம், சேர்வலாறு அணைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையொட்டி அணைகளிலிருந்து தாமிரபரணி ஆற்றில் கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நேற்று 137.80 அடியாக நீர்மட்டம் இருந்தது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 142.06 அடியாக உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 378 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து வினாடிக்கு 7,771 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் 89.30 அடி தண்ணீர் உள்ளது. கொடுமுடியாறு அணை நிரம்பியதால், அந்த அணைக்கு வருகிற 700 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தென்காசி மாவட்டம் கடனாநதி, ராமநதி அணைகளிலும் உபரிநீர் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் தடுப்பணையான மருதூர் தடுப்பணையைத் தாண்டி விழுந்து வினாடிக்கு 9,800 கன அடி தண்ணீர் செல்கிறது. மேலும் மருதூர் அணையின் கீழக்கால் வழியாக வினாடிக்கு 350 கன அடி தண்ணீரும், மேலக்கால் வழியாக வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோன்று தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி விழுந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கிறது.
ஸ்ரீவைகுண்டம் வடகால் மூலம் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையைத் தாண்டி விழுந்து ஆண்டுதோறும் பல ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்வதால், அதனை வறண்ட குளங்களுக்கு அனுப்பித் தேக்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


