தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில், பருவ நிலை மாற்றங்களாலும், சூழ்நிலைகளாலும், இயற்கை இடர்பாடுகளான புயல், வெள்ளம், வறட்சி போன்றவை மாறி மாறி தாக்குகிறது. இதனால் வாழை, வெங்காயம், மிளகாய், வெண்டை மற்றும் மல்லி போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு பெரும் சேதாரம் ஏற்படுகிறது. இதிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், ராபி பருவத்தில் வாழைப்பயிர் காப்பீடு செய்ய 28 பிப்ரவரி 2022, வெங்காயம் பயிர்க் காப்பீடு செய்ய – 31 ஜனவரி 2022, மிளகாய் பயிர்க் காப்பீடு செய்ய – 31 ஜனவரி 2022, வெண்டை பயிர்க் காப்பீடு செய்ய – 15 பிப்ரவரி 2022 மற்றும் மல்லி பயிர்க் காப்பீடு செய்ய – 31 டிசம்பர் 2021 கடைசி நாள் ஆகும்.
எனவே பயிர்க் காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் எக்டருக்கு வாழை பயிருக்கு – ரூ.7928.70, வெங்காயம் – ரூ.2426.80, மிளகாய் – ரூ. 2077.90, வெண்டை – ரூ.1988.35, மல்லி – ரூ. 971.95 பிரிமியம் தொகையுடன் அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரத்துடன் பொதுச் சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


