மருமகள் நகையைத் திருடிவிட்டு நாடகமாடிய மாமியார் உட்பட 2பேர் கைது
கோவில்பட்டி அருகே மருமகள் நகைகளைத் திருடிவிட்டு, கரடி வேடமணிந்த திருடர்கள் திருடியதாக நாடகமாடிய மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆவுடையம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மனைவி பார்வதியம்மாள் (55). மாடசாமி இறந்துவிட்டார். பார்வதியம்மாள் தனது மகன் ராமகிருஷ்ணன், மருமகள் இசக்கியம்மாள் ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த 12ம் தேதி நள்ளிரவில் பார்வதியம்மாள் வீட்டின் வெளியே சென்றபோது, கரடி வேடமணிந்த 2 பேர் தன்னை தாக்கி, வீட்டின் அருகே இருந்த கல் தூணில் கட்டி வைத்துவிட்டு, வீட்டின் உள்ளே சென்று கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக கூறினார்.
இதையடுத்து, தனது மருமகளிடம் 2 பீரோவில் உள்ள நகைகள் மற்றும் வீட்டில் உள்ள பணம், பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லியுள்ளார். அவரது மருமகள் இசக்கியம்மாள், 2 பீரோவையும் பார்த்த போது, ஒரு பீரோவிலிருந்த இசக்கியம்மாளின் 6 பவுன் தங்க நகையைக் காணவில்லை. பார்வதியம்மாளின் மகன், மருமகள் இருவரும் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். நாலாட்டின்புதுார் காவல்துறை ஆய்வாளர் பத்மாவதி தலைமையிலான காவல்துறை ஆவுடையம் மாள்புரத்திற்கு சென்று பார்வதியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவருடைய பதில்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததையடுத்து, காவல்துறை சந்தேகமடைந்தனர். திருடர்கள் வந்த வழி குறித்து பார்வதியம்மாள் கொடுத்த தகவலின்படி சென்று காவல்துறை சோதனை செய்தபோது, அங்குள்ள முட்புதரில் ஒரு தாளில் நகைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். நகைகளைக் கைப்பற்றிய காவல்துறை மீண்டும் பார்வதியம்மாளிடம் விசாரணை நடத்தியபோது, அவரே நகைகளை எடுத்து மறைத்து வைத்து விட்டு, கரடி வேடமணிந்த திருடர்கள் வந்து, தன்னை தாக்கி கல் தூணில் கட்டி வைத்தனர் என்று கூறி நாடகமாடியது அம்பலமானது.
பார்வதியம்மாளின் தம்பி வரதராஜ் அவரின் வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். வரதராஜ் குடும்பத்தில் சிலருக்கு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருவதால், வரதராஜ் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகத் தெரிகிறது. தனது குடும்ப கஷ்டம் குறித்து வரதராஜ் பார்வதியம்மாளிடம் கூறியுள்ளார். பார்வதியம்மாள் வீட்டில் உள்ள நகைகளை எடுத்துத் தருவதாகவும், அதை வைத்து குடும்ப கஷ்டத்தைத் தீர்த்துக் கொள்ளுமாறு தனது தம்பியிடம் கூறியுள்ளார். அக்கா, தம்பி இருவரும் சேர்ந்து நகைகளை எடுத்து வைத்துக் கொண்டு, திருடுபோனதாகக் கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை, பார்வதியம்மாள் மற்றும் வரதராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


