வானிலை எச்சரிக்கை காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று 2-வது நாளாகக் கடலுக்குச் செல்லவில்லை.
குமரிக் கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 50 கிலோமீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் நாளை (16ம் தேதி) வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப் பட்டி, திரேஸ்புரம், இனிகோ நகர், தெர்மல் நகர், புன்னைக் காயல், மணப்பாடு, பெரிதாழை உள்பட மாவட்டம் முழுவதும் விசைப்படகுகள், மற்றும் நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. படகுகள் மீன்பிடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.


