தூத்துக்குடியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உருவப் படங்களை எரித்து போராட்டம் நடத்திய 20பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். உபியில் விவசாயிகள் படுகொலைக்குக் காரணமான உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றோரின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அகம்மது இக்பால் தலைமையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாரிசெல்வம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கிருஷ்ணமூர்த்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மகேஸ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உருவ பொம்மைகளுடன் தூத்துக்குடியில் தந்தி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களிடம் இருந்து உருவ பொம்மைகளைப் பறிமுதல் செய்தனர்.
அப்போது போராட்டம் நடத்தியவர்கள் திடீரென மோடி மற்றும் மற்றும் அமித்ஷாவின் உருவப் படங்களை எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 20பேரை மத்திய பாகம் காவல்துறை ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், டவுண் டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுட்டனர்.


