திருச்செந்தூர் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தீவிபத்தில் உயிரிழந்தது தொடர்பாகக் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தழை கிராமம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கீதன். இவரது மனைவி ஜெனிட்டா (22). இந்த தம்பதியருக்குக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 6 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி ஜெனிட்டா குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் வெந்நீர் போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்டவ் அவர் மீது சரிந்து விழுந்ததில், ஜெனிட்டா பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்சிங் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமான 2 ஆண்டுகளில் பெண் உயிரிழந்தது தொடர்பாகத் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


