தூத்துக்குடி மாவட்டத்தில் பிற வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எந்த கட்டணமும் இல்லாமல் எடுக்க இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா வெளியிட்ட செய்திக்குறிப்பு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் ஆதார் பேமெண்ட் சேவை (AEPS) மூலம் பிற வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எந்த கட்டணமும் இல்லாமல் உங்கள் வீட்டின் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பெற முடியும் இதற்காகத் தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்குச் சொந்தமான வங்கியாகும். இந்த வங்கி பொது மக்கள் அணுகுவதற்கு எளிமையான, குறைந்த கட்டணங்களுடன், நம்பகமான வங்கி சேவையினை அளிக்கும் நோக்கத்துடன் நகரங்களில் மற்றும் கிராமங்களிலும் துவங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் தங்களுடைய பிற வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அஞ்சல் நிலையங்களில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் ஆதார் பேமெண்ட் சேவை (AEPS) மூலம் எந்த வித கட்டணமும் இல்லாமல் எளிதில் பெற முடியும் அஞ்சல் நிலையங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதி போஸ்ட்மேன் மூலமாகவும் இந்த சேவையைப் பயன் படுத்திக்கொள்ள முடியும்.
இந்த இக்கட்டான கொரோனா காலத்தில், பிற வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கத் தொலைவில் உள்ள வங்கி கிளையையோ அல்லது ஏடிஎம் இயந்திரத்தையோ தேடும் அலைச்சலின்றி, தங்கள் ஊரில் உள்ள அஞ்சல் நிலையத்திலேயே தங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எளிதாகப் பெற முடியும், இந்த ஆதார் பேமெண்ட் (AEPS) சேவை மூலம் பிற வங்கிக் கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றமும் செய்ய முடியும், கணக்கில் உள்ள பேலன்ஸ் மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் தகவல்களையும் பெற முடியும்.
இதற்குப் பயனாளிகளிடமிருந்து எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை மேலும் இந்த சேவையைப் பெறப் பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணைப் பதிவு செய்திருத்தல் அவசியம். அஞ்சல் நிலையங்களில் பணம் பெற வரும் பொழுது பயனாளிகள் தங்கள் ஆதார் அட்டையையும், கைப்பேசியையும் கொண்டு வரவேண்டும்.
மேலும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி முதியோர் உதவித்தொகை, நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் சம்பளம், கர்ப்பிணிப் பெண்கள் உதவித் தொகை திருமண உதவித் தொகை, பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான உதவித் தொகை, விவசாயிகளின் பி.எம். கிசான் உதவித் தொகையை எளிதில் பெற முடியும். சிறு குறு தொழிலாளர்கள் நடப்பு கணக்கு துவங்கி, வங்கி மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்ய முடியும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தின் பொதுமக்கள் அனைவரும் இந்த இக்கட்டான கொரோனா காலங்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவையைப் பயன்படுத்திப் பயனடையுமாறு கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்துள்ளார்.


