
கொற்கையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் செங்கல் கட்டுமானத்தின் அடியில் 3 அடி உயரத்தில் தானியங்கள் சேமிக்கும் கொள்கலன் கண்டுபிடிப்பு.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் 52 வருடங்களுக்கு பின்னர் அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கி தொடர்ந்து 6 மாத காலமாக நடந்து வருகிறது.
கொற்கையை பொறுத்தவரை பாண்டியனின் தலைநகராகவும், துறைமுகமாகவும் இருந்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வாணிபத்தொடர்ந்து இருந்ததை உறுதிப்படுத்தும் விதமாக ஏராளமான பொருட்கள் கடந்த ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோலவே இந்த முறையும் அதிகமாக பொருள்கள் கிடைககும் என்ற எதிர்பார்ப்புடன் அகழாய்வு தொடங்கியது. அகழாய்வு இயக்குனர் தங்கதுரை, தொல்லியல் அலுவலர் ஆசைதம்பி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.
தற்போது நடைபெற்ற அகழாய்வு பணியில் 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் குழாய் அமைப்பு, செங்கல் கட்டுமான அமைப்பு என 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஆய்வில் மாறமங்கலம் பகுதியில் மிகவும் பழமையான செப்பு நாணயம் மற்றும் அலுமினிய நாணயம் என இரண்டு வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கால்டுவெல் ஆய்வின் போது அதிகமான நாணயங்கள் கிடைத்த இடம் என கொற்கை போற்றப்பட்டது .தற்போது ஆய்வில் கொற்கையில் நாணயங்கள் கிடைக்கவில்லை என்ற குறையை தற்போது கிடைத்த ஆய்வு போக்கியுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் இந்த அகழாய்வில் பல்வேறு அற்புதங்கள் தென் படுகிறது. இது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கொற்கை ஆய்வில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் செங்கல் கட்டுமானத்தின் அடிப்பகுதியில் சுமார் 3 அடி உயரம் கொண்ட கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கலன் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உணவு தானியங்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதை திறந்த பின்னரே உள்ளே என்ன தானியங்கள் இருக்கும் என்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் தொல்லியல் ஆய்வு செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. இந்த சமயத்தில் பல தகவல்கள் நமக்கு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.
இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, கொற்கை பாண்டியனின் துறைமுகம், இடைசங்கம்இருந்த இடம். இதனோடு சேர்ந்து ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற பகுதிகள் போற்றப்படுகின்றன. தற்போது அகழாய்வுக்கு ஒரு பொற்காலம் என்றே கூறலாம். குறிப்பாக ஆதிச்சநல்லூரில் உலக தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது . இதற்கிடையில் தமிழக பட்ஜெட் கொற்கை உள்ளிட்ட பகுதியில் கடல் சார்ந்த ஆய்வு செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது கொற்கை யில் உள்ள குழிகளில் உணவு சேகரித்து வைக்கும் கலன் கிடைத்துள்ளது. இதுபோன்ற அபூர்வ பொருள் கிடைத்த காரணத்தினால் நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளோம். மேலும் பல அற்புத தகவல்கள் கிடைககும் என ஆர்வத்துடன் உள்ளோம் என்றார்.
கொற்கையில் நடந்து வரும் தொல்லியல் ஆய்வுப்பணியில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.