ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள நவதிருப்பதி ஸ்தலங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. இந்த நவத்திருப்பதி ஸ்தலங்களில் வருடம் தோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள 9 நவத்திருப்பதிகளான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி தேவர்பிரான் கோவில், அரவிந்தலோசனர் பெருமாள் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகியவற்றில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையட்டி கோவில்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்மண்டபங்களில் உற்சவர்கள் சயன கோலத்தில் எழுந்தருளினர். காலை முதலே உள்ளூர் மக்களுக்கு மட்டும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உற்சவர் கள்ளபிரான் சொர்க்கவாசலை திறந்து காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு அவரது தலைமையில் கோவில் பகுதியில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


