தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோயில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு சயன கோலத்தில் பெருமாள் தரிசனம் அளித்தார்.
108 வைணவத் தலங்களில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தாமிரபரணி நதிக்கரையில் 9 பெருமாள் கோயில்கள் நவதிருப்பதி தலங்களாக அமைந்துள்ளன. ஸ்ரீவைகுண்டத்தில் கள்ளபிரான், நத்தத்தில் எம்மிடர்க்கடிவான், திருப் புளியங்குடியில் காய்சினவேந்தன், பெருங்குளத்தில் மாயக் கூத்தர், இரட்டை திருப்பதியில் தேவர் பிரான், தொலைவில்லிமங் கலத்தில் செந்தாமரைக் கண்ணன், தென் திருப்பேரையில் நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூரில் வைத்தமாநிதி, ஆழ்வார் திருநகரியில் பொலிந்துநின்றபிரான் என்ற திருநாமங்களில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
மார்கழி மாதம் வரும் ஏகாதசி திருவிழாவானது பகல்பத்து, ராப்பத்து உற்சவத்துடன் திரு அத்யயன திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பகல்பத்தில் திருமொழி பாசுரங்களையும், இராப்பத்தில் திருவாய்மொழி பாசுரங்களையும் பாடி பெருமாளை வழிபடுவர்.இன்ற இராப்பத்து விழாவின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் நடைதிறக்கப் பட்டு ஆதிசேஷன் குடை பிடிக்க சயனக் கோலத்தில் நவதிருப்பதி பெருமாள் உற்சவமூர்த்திகள் தாயார்களுடன் காட்சியருளினார். இதுபோல் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில், கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.


