முழு மனித இனத்தையும் கல்வி என்ற மிகப் பெரிய ஆயுதத்தால் சீரமைத்து வருபவர்கள் ஆசிரியர்கள்.
சமூகத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிக அதிகம். இன்றைய மனித இனத்தின் நாகரீக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது பாடப்பொருளோடு நல்லொழுக்கத்தையும் கற்பிக்கும் ஆசிரியர்களே…!
வளரும் குழந்தையின் *ஆசு* நீக்கி, வேண்டிய வடிவத்தை மட்டும் செதுக்கும் சிற்பி ஆசிரியன்( ஆசு நீக்கி_ குற்றம் நீக்குபவன்)
வெறுமனே பாடத்திட்டத்தினடிப்படையில் உள்ள கருத்துக்களை மட்டும் மாணாக்கர்களிடம் திணிப்பவர்களல்ல ஆசிரியர்கள்.
வருங்கால இளைஞர் கூட்டம்,சமூக, பொருளாதார ,அரசியலில் கோலோச்ச,தங்களைத் தயார்ப் படுத்தி வருபவர்களே இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், தொழில் பயிற்சிகளிலும் மாணவர்களாக இருந்து கொண்டிருப்பவர்கள்.
இவர்களைப் பாட அறிவோடு பண்பாளர்களாக வடிவமைத்து அவர்களது திறமைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுபவர்களே சிறந்த ஆசிரியர்கள்.!
ஆனால் இன்று மாணவர்களது தவறுகளைச் சுட்டிக் காட்டவோ தண்டிக்கவோ ஆசிரியர்களுக்கு உரிமையற்ற நிலையே கல்வி வரலாற்றின் புதுமையான மாற்றமாக கருதப்பட்டுக் கொண்டாடப் படுகிறது. தவறுகளைக் கண்டித்து பேசினால் கூட ஆசிரியர்கள், மாணவர்களாலும் பெற்றோர்களாலும் எதிர்ப்பிற்கு உள்ளாக வேண்டியுள்ளது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசில ஆசிரியர்களின் தவறான அணுகுமுறைகளை வைத்து, முழு ஆசிரியர் சமூகத்தையும் தவறானவர்களாக நினைப்பது அறிவுடமை ஆகாது.
மாணவர்களை மையமாகக் கொண்ட கல்விமுறை சிறந்ததுதான்..ஆனால் அவர்களைக் கண்டித்து திருத்தும் உரிமையை ஆசிரியர்களின் வேலையல்ல என்றும் பாடப்பொருளை விளங்க செய்தலை மட்டுமே அவர்களது பணியென்ற நிலமை வந்த பிறகு
ஒழுக்கத்தைப் பற்றி ஆசிரியர்கள் பேச இயலாமல் போய்விட்டது.
இன்று பதினேழு வயது கூட நிரம்பாத சிறுவர்கள் மது அருந்துவதும் , பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதும் சர்வசாதாரணமாகி வருகிறது. பள்ளிகளுக்குள்ளும் மதுவருந்தி வருவதாகவும் அதனை தட்டிக் கேட்க இயலாமல் கட்டப்பட்டு சுதந்திரமின்றி ஆசிரியர்களாக இருந்து வருகிறோம் என்றுதங்களது வேதனையை வெளிப்படுத்தும் ஆசிரியப் பெருமக்கள் அதிகரித்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் மாணாக்கர்களைத் தமது குழந்தைகளாகப் பாவித்து அறியாதப் பருவத்தில் அவர்கள் செய்யும் தவறுகளைத் தண்டிக்கவோ உணர்த்தித் திருத்தவோ வாய்ப்பளிக்காத நிலமையை மாற்ற, கல்வித்துறை ஏற்ற நடவடிக்கைகளை எடுத்தாலொழிய எதிர்கால சமூகத்தின் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாமல் போய்விடும்.
பெற்றோர்களும் மாணவர்கள் குற்றம் புரியும் போது,அதன் காரணத்தை சரிவர ஆராயாமல் மாணவர்களின் கருத்துகளை மட்டுமே நம்புதல் , சீர்படுத்தும் ஆசிரியர்களை அவதூறாக பிள்ளைகளின் முன்பு பேசுதல் போன்ற முதிர்ச்சியற்ற செயல்பாடுகள் ஆபத்தானவை. இதற்குத் தங்களது குழந்தைகள் மேல் உள்ள அதிக அன்பு தான் காரணம். ஆனாலும் இந்நிலை குழந்தைகளின் பெரும் ஒழுக்க கேட்டிற்கே வழிவகுக்கிறது என்பதை பெரும்பாலானோர் அறிவதே இல்லை.
கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை விரும்பும் வயது பள்ளிப்பருவம். எனவே மாணவர்களின் மனநிலை எதற்கும் கட்டுப்பட மறுக்கும் பக்குவமற்ற நிலையில் இருப்பது இயல்பு தான். குழந்தை மனவியலை நன்கு கற்றுத் தேர்ந்த நிலையிலிருக்கும் ஆசிரியர்களால்தான் இவர்களை நல்வழிப் படுத்த இயலும்.
இந்நிலையில் மாணவர்களை ஆசிரியர்கள் நெறிபடுத்த இயலாத சூழலை ஏற்படுத்தி விடுவதால் ,வெற்றி பெறுமளவு படித்தால் போதும் என்ற மனநிலைக்கு ஆசிரியர்கள் மனவேதனையோடு ஒதுங்கி கொள்ள வேண்டியுள்ளது.
இதனால் அத்தகைய மாணவர்கள் மட்டுமல்ல பிற்கால சமுதாயமே மிக மோசமான விதத்தில் பாதிக்கப்பட்டு விடும்.
எனவே ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்ற மூன்று பெரும் சக்திகளின் ஆரோக்கியமான வளர்ச்சியே சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை அரசும் கல்வி நிலையங்களும் எடுத்துச் சீர்பொருந்த வேண்டும்.
பள்ளிகளில் அடிக்கடி ஆசிரியர் ,மாணவர், பெற்றோர் கூடுகைகள் போடப்பட்டு, பள்ளி மாணவர்களுக்காக எடுக்கப்படும் உயர்ந்த நோக்கங்களையும் அவற்றைச் செயல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்த வேண்டும்.
வீட்டுச் சூழலில் குழந்தைகளின் செயல்பாடுகளுக்கும் பள்ளி என்னும் சூழலில் அவர்களது தனித்துவமான செயல்பாடுகளுக்குமிடையேயான வேறுபாட்டைப் பெற்றோர்களுக்கு உளவியல் ரீதியாக எடுத்துரைக்க வேண்டும்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையே ஏற்பட்டுவரும் இடைவெளிகளின் பாதிப்பைக் குறித்தும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.குழந்தைகளோடு நேரம் செலவிட்டு பரஸ்பரம் அன்பை வெளிக்காட்டும் பட்சத்தில் தான் குழந்தைகளின் மனவளர்ச்சியில் பிறழ்வு ஏற்படாது. ஆசிரியர்களின் அறிவுரைகளும் கண்டிப்பும் மாணவர்களின் நல்வாழ்விற்கானதே என்பதை பெற்றோர்கள் அடிக்கடி தம் குழந்தைகளுக்கு தெளிவாக்க வேண்டும்.
பெற்றோர்கள், மாணவர்களின் மனதில் ஆசிரியர்களின் மீது கசப்பை ஏற்படுத்தும் விதத்தில் அறைக்குறையான அறிவில் பேசுதல், அவர்களது கற்றல் திறனைத்தான் பாதிக்குமேயன்றி
ஆசிரியர்களின் நன்மதிப்பை என்றுமே குறைத்து விட முடியாது என்பதை உணர்ந்து செயல்படும் போது தான், ஆசிரியர், மாணவன், பெற்றோர் …என்ற மும்முனை இணைப்பு ஓர் அறிவார்ந்த சமூகத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்பது உண்மை.
என்றுமே நாம் வாழும் சமூகத்தைச் சீர்படுத்தும் சிற்பி ஆசிரியர்கள், என்பதை அதில் வாழும் ஒவ்வொருவரும் உளமார புரிந்து கொண்டால் தான் சுதந்திரமாக அச்சிற்பியால் சமூகம் வடிவமைக்கப்படும். இல்லையேல் தான்தோன்றிதனமான ஒரு சமூகமே நம் எதிர்காலத்தில் விளைந்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை!!
விழிப்புடனும் விவேகத்துடனும் நமது சமூகத்தைப் பேணி வளர்ப்போம்.
.


