தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளபெருக்கு போல் இந்த ஆண்டு நிகழாமல் இருக்க வெள்ள தடுப்பு திட்டம் தயார் செய்ய மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பின்வரும் அறிவுரைகள் துறை வாரியாக அனைத்து துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகள்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாத்தியப்பட்ட சமுதாய கூடங்கள் /திருமணமண்டபங்கள்/ பள்ளிகள் பொது சமையலறையாகவும் தற்காலிக நிவாரண மையங்களாக செயல்படும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் மற்றும் தற்காலிக முகாம்களில் போதிய அளவு கழிப்பறை அமைக்க வேண்டும். முகாம்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு): மணல் மூட்டைகள் தேவை என கருதப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்து தேவைப்படும் நேரத்தில் உடனடியாக பயன்படுத்த வேண்டும். மணல் மூட்டைகள் எத்தனை உள்ளன?, எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை உடன் தெரிவிக்க வேண்டும். குளங்களில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனே அடைக்க வேண்டும்.
கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்ட குளங்களை ஆய்வு செய்து நிரந்தரமாக சரி செய்ய துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் குளங்களில் உள்ள மதகு கதவுகளை திறக்க அதற்கென நியமிக்கப்பட்ட பணியாளர் (லஸ்கர்) எப்போதும் பணியில் உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ), தூத்துக்குடி: சேதமடைந்துள்ள கம்பங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றிகள் ஆகியவற்றை உடன் மாற்றி அனைத்தும் நல்ல நிலையில் உள்ளது என்பதையும் பாதுகாப்பையும் உறுதி செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். போதுமான அளவில் மின்கம்பங்கள், மின்வயர்கள் இருப்பு வைத்திட வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை: சாலைகளில் உள்ள குழிகள் சரி செய்யப்பட்டு; முறையாக பராமரிக்கப்பட வேண்டும். நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் வாய்க்கால்களை தலப்பார்வையிட்டு, அவற்றில் தங்குதடையின்றி நீர் செல்ல அடைப்பு ஏதுமில்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்திட தேவையான காலி சாக்குகள், மணல், சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
மருத்துவத் துறை: அத்தியாவசியமான மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள், தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் ஆகியவற்றினை கொள்முதல் செய்து இருப்பு வைக்க வேண்டும். போதுமான அளவு மருந்துகள் இருப்பு இருக்கிறதா? என உறுதி செய்து தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தாழ்வான பகுதிகளிலுள்ளவர்களை வெள்ள அபாயத்தை முன்னிட்டு வெளியேற்றி தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படும் போது வயதானவர்கள், கர்ப்பினி பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோரை முன்னதாக வெளியேற்றப்பட வேண்டும் என்பதால் மேற்படி நபர்களின் பட்டியல் தயார் செய்து வருவாய் துறையினருக்கு வழங்க வேண்டும். வெள்ள பாதிப்பினால் தொற்று நோய் ஏதும் ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள தற்காப்பு நடடிவடிக்கை விபரங்களை அனுப்ப வேண்டும்.
மீன்வளத்துறை: புயல் தொடர்பாக வரப்பெறும் மீனவர்களுக்கான எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மீட்பு பணிகளுக்கு தேவையான தன்னார்வலர்கள்(நீச்சல் வீரர்கள்), படகுகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தீயனைப்பு துறை: காவல்துறை மற்றும் வருவாய் துறையினை கலந்தாலோசித்து பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடத்திட வேண்டும். குறிப்பாக வெள்ளபாதிப்பு ஏற்படவாய்ப்புள்ள பகுதிகளில் பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும்.
பொதுப்பணித்துறை (கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு ): பள்ளிக்கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் புயல் பாதுகாப்பிடங்கள் போன்ற பொதுக்கட்டிடங்களை உடனடியாக ஆய்வு செய்து புயல், கடும் மழை ஏற்பட்டால் பாதிக்கப்பட்டோரை குடியமர்த்த தகுதி படைத்ததாக இருக்கிறதா?, என சரிபார்த்திட வேண்டும். அடிப்படை வசதிகளான மின்வசதி, தண்ணீர் வசதி ஆகியன மேற்படி கட்டிடங்களில் உள்ளனவா? என ஆய்வு செய்திட வேண்டும். பழுதுகள் இருப்பின்; உடனடியாக சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம்: கனமழை / வெள்ள காலங்களில் குடிநீர் திட்டங்களில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டத்திலுள்ள குழாய்களில் கசிவு ஏதும் உள்ளதா என்பதை சரி பார்த்து பலவீனமான இடங்களில் சரி செய்யப்பட வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி கல்வி துறை: கல்வி நிலையங்களிலுள்ள மின்சார வயரிங்குகள், மின் இணைப்புகள் ஆகியவை சரியாக உள்ளதா, கழிவு நீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ளதா, குழிகள் ஏதுமிருப்பின் மூடப்பட்டு விட்டதா, மொட்டை மாடியிலுள்ள மழைநீர் வெளியேறும் குழாய்களிலுள்ள அடைப்புகள் எடுக்கப்பட்டு விட்டனவா என்பதை சரி பார்த்து கல்வி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்.
உணவு வழங்கல் மற்றும் கூட்டுறவுத் துறை: போதுமான அளவு உணவு தானியங்கள், மண்ணெண்ணெய், சாக்குப்பைகள் ஆகியவைகள் இருப்பு வைக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்புத்துறை: தாழ்வான பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு சென்று தங்க வைக்க தகுதியான இடங்களை தேர்வு செய்தும் அங்கு கொண்டுவரப்படும் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் வழங்கிடவும் மருத்துவ கவனிப்புகள் செய்திடவும் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.
வனத்துறை: நீர் நிலை ஆதாரங்களில் ஏற்படும் உடைப்புகளை அடைக்க தேவையான சவுக்கு கம்புகள் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.
போக்கு வரத்து துறை: நிவாரண முகாம்களுக்கு பொது மக்களை கொண்டு செல்ல மற்றும் மீட்பு பொருட்கள் கொண்டு செல்ல தேவையான தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். கனரக வாகன உரிமையாளர்கள், துஊடீ உரிமையாளர்கள் பட்டியலினை தொலைபேசி எண் விபரங்களுடன் அனுப்ப வேண்டும்.
தொலை தொடர்புத் துறை: மழைக்காலங்களில் தொலைத்தொடர்பு இணைப்புகள் பழுதாகும் போது அதை உடனுக்குடன் சரிசெய்ய ஏதுவாக பணியாளர்களை தயார் நிலையில் வைத்து சரிசெய்திட வேண்டும்.
மக்கள் தொடர்பு துறை: இயற்கை இன்னல்களின் போது பொது மக்களுக்கு வழங்க வேண்டிய தகவல்களை உடனுக்குடன் வழங்கிடவும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்படும் விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கவும் வேண்டும்.
காவல் துறை: வெள்ள காலங்களில் Police Deployment plan தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும் மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புகுழுக்கள் அமைத்து அவர்களுக்கு தேவையான பயிற்சி வழங்க வேண்டும். வருவாய் துறை அலுவலர்களுடன் இணைந்து தாழ்வான பகுதிகளிலுள்ளவர்களை வெளியேற்றும் பணியில் செயல்பட வேண்டும். அப்பகுதிகளில் கொள்ளை ஏதும் நடைபெறாவண்ணம் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
வருவாய்த்துறை: வெள்ளபாதிப்பு பகுதிகளிலுள்ளவர்களை தங்க வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து போதிய வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் வசதிகள் குறைவாக இருப்பின் அதனை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு வசதிகள் செய்யப்பட வேண்டும். வெள்ள பாதிப்புகுள்ளாகும் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ள தேவையான பொருட்களை வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிக்கு அருகில் தகுதியான இடம் தேர்வு செய்து இருப்பு வைத்திட வேண்டும். வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்கிட பிர்கா அளவில் மண்டல அலுவலர் நியமித்து நிவாரணம் விரைவாக வழங்க வேண்டும்.
மேலும், அனைத்து துறை அலுவலர்களும் 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளபெருக்கு போல் இந்த ஆண்டு நிகழாமல் இருக்க தங்கள் துறையின் மூலம் எடுக்கப்பட்டுள்ள வெள்ள தடுப்பு பணிகள் குறித்த வெள்ள தடுப்பு திட்டம் தயார் செய்து அறிக்கையினை இவ்வலுவகத்திற்கு அனுப்பிடவும் மற்றும் 15 தினங்களுக்குள் நடைபெறும் அடுத்த முன்னேற்பாடு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) செல்வி.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு) எடிசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


